முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு வழங்கப்பட்ட நிபந்தனை ஜாமீனில் தளர்வு...

 
jayakumar

நில அபகரிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வாரந்தோறும் திங்கள் கிழமை ஆஜராக வேண்டுமென்ற நிபந்தனையை தளர்த்தி சென்னை உயர் நீதிமன்றம்,  உத்தரவிட்டுள்ளது.

சென்னை துரைப்பாக்கதில் 8 கிரவுண்ட் நில உரிமை தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மருமகனான நவீன்குமார் என்பவருக்கும், அவரது சகோதரர் மகேஷ்குமார் என்பவருக்கும் பிரச்சினையில், தனது செல்வாக்கை பயன்படுத்தி அடியாட்கள் மூலம்  மிரட்டி, நிலத்தை அபகரித்து கொண்டதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் ஜெயக்குமாருக்கு எதிராக சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பான வழக்கில் கைதான ஜெயக்குமாருக்கு ஜாமீன் வழங்கிய சென்னை உயர் நீதிமன்றம், இரு வாரங்களுக்கு திருச்சியில் தங்கியிருந்து, கண்டோன்மெண்ட் போலீசில் கையெழுத்திட வேண்டும் என்றும், அதன் பின்னர் திங்கட்கிழமைதோறும் விசாரணை அதிகாரி முன்பு கையெழுத்திட வேண்டும் எனவும் நிபந்தனை ஜாமீன் வழங்கியிருந்தார்.

high court

இந்த நிலையில் திங்கள்கிழமை தோறும் கையெழுதிட வேண்டும் என்ற நிபந்தனையை தளர்த்த கோரி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர்,  ஜெயக்குமார் வாரந்தோறும் ஆஜரானாலும்  விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என கூறி, நிபந்தனைகளை தளர்த்த கடும் ஆட்சேபனை  தெரிவித்தார்.

அப்போது ஜெயக்குமார் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஏ.நடராஜன் ஆஜராகி திருச்சியிலும், சென்னையிலும் நீதிமன்ற உத்தரவுகளை முறையாக பின்பற்றுவதாக தெரிவித்தார். இதனையடுத்து விசாரணைக்கு போதிய ஒத்துழைப்பை அளிக்க வேண்டுமென தெரிவித்த நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, வாரந்தோறும் ஆஜராக வேண்டுமென்ற நிபந்தனையை, ஒவ்வொரு மாதமும் முதல் மற்றும் மூன்றாவது வார திங்கட்கிழமைகளில் ஆஜராக வேண்டுமென தளர்த்தி உத்தரவிட்டார்.