ஜன. 18ல் ராமதாஸ் தொடங்கிய அமைப்புகளில் செயல்பாடுகள் குறித்து ஆய்வு - அன்புமணி அறிவிப்பு..

 
anbumani

மருத்துவர் ராமதாஸ் தொடங்கிய 19 அமைப்புகளின் செயல்பாடுகள் குறித்த ஆய்வு  ஜனவரி 18-ம் தேதி நடைபெறும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அரசியல், சமூக, மொழி, கல்வி, கலை, கலாச்சார வளர்ச்சிக்காகவும், உரிமைகளை வென்றெடுப்பதற்காகவும் இதுவரை 34 அமைப்புகளை தொடங்கியிருக்கிறார். அந்த அமைப்புகள் அவை அவை சார்ந்த தளங்களில் பணியாற்றி வருகின்றன.  

ஜன. 18ல் ராமதாஸ் தொடங்கிய அமைப்புகளில் செயல்பாடுகள் குறித்து ஆய்வு - அன்புமணி அறிவிப்பு..

எந்தவொரு அமைப்பாக இருந்தாலும் அவற்றின் செயல்பாடுகளை ஆய்வு செய்து, நிறைகளையும், குறைகளையும் குறிப்பிட்ட காலத்திற்கு ஒருமுறை மதிப்பீடு செய்ய வேண்டியது அவசியம் ஆகும். அப்போது தான் சிறப்பாக செயல்படும் அமைப்புகளை முன்னுதாரணமாகக் கொண்டு மற்ற அமைப்புகள் சிறப்பாக செயல்பட வழிவகுக்க முடியும். அதேபோல், ஏதேனும் அமைப்புகளின் செயல்பாடுகளில் குறைகள் இருந்தால், அதை கண்டறிந்து சரி செய்வதன் மூலம் தான் அந்த அமைப்புகளை முன்னேற்ற முடியும்.  இவை அனைத்திற்கும் அமைப்புகளின் செயல்பாடுகளை மதிப்பீடு செய்ய வேண்டியது கட்டாயமாகும்.

அந்த வகையில், மருத்துவர் ராமதாஸ் தொடங்கிய 34 அமைப்புகளில் முதற்கட்டமாக 19 அமைப்புகளின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் வரும் 18-ம் தேதி புதன்கிழமை காலை 10.00 மணிக்கு தைலாபுரத்தில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் அரசியல் பயிலரங்கத்தில் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் முன்னிலையிலும், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தலைமையிலும் நடைபெறும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 ராமதாஸ்..

ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்க வேண்டிய அமைப்புகளின் பட்டியல்:
1. பாட்டாளி மக்கள் கட்சி
2. வன்னியர் சங்கம்
3. சமூக முன்னேற்ற சங்கம்
4. பாட்டாளி தொழிற்சங்கப் பேரவை
5. பாட்டாளி இளைஞர் சங்கம்
6. தமிழக மாணவர் சங்கம்
7. பசுமைத் தாயகம்
8. வழக்கறிஞர்கள் சமூகநீதிப் பேரவை
9. பாட்டாளி மகளிர் சங்கம்
10. தமிழ்நாடு படைப்பாளிகள் பேரியக்கம்
11. தமிழ்நாடு உழவர் பேரியக்கம்
12. பாட்டாளி சமூக ஊடகப் பேரவை
13. பாட்டாளி இளம் பெண்கள் சங்கம்
14. அன்புமணி தம்பிகள் படை
15. அன்புமணி தங்கைகள் படை
16. தமிழ்நாடு இளையோர் மேம்பாட்டு இயக்கம்
17. வன்னியர் இன மான, உரிமை காப்பு அறிவுசார் பரப்புரை இயக்கம்
18. தமிழ்நாடு அரசு அலுவலர் மற்றும் பணியாளர்கள் உரிமை நலச் சங்கம்
19.  தமிழக ஆசிரியர்கள் பாதுகாப்பு மற்றும் முன்னேற்ற சங்கம்

மேற்கண்ட அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் செயலாளர்களுடன், பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் பணிக்குழு, கொள்கை விளக்க அணி மற்றும் அமைப்புப் பிரிவின்  தலைவர், செயலாளர்களும் இந்த கலந்தாய்வுக் கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.