அவனியாபுரத்தில் நாளை ஜல்லிக்கட்டு.. ஏற்பாடுகள் தீவிரம்..

 
Jallikattu

அவனியாபுரத்தில் நாளை ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சுமார் 400 வீரர்கள், 800  காளைகள் களம் காண்கின்றனர்.
 
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே உள்ள அவனியாபுரத்தில் தைப்பொங்கல் நாளான  ஜன 15 அன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம்.  இந்த ஆண்டு அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த பெண்கள் பாசன விவசாயிகள் சங்கம்,   அவனியாபுரம் கிராம கமிட்டி இடையே எந்தவித சமரசம் உடன்படிக்கையும் ஏற்படாததால் மதுரை மாநகராட்சி நிர்வாகமே ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த ஏற்பாடு செய்திருக்கிறது.   இதனைத் தொடர்ந்து மாநகராட்சி சிறப்பு நிதியில் இருந்து ரூ. 7 லட்சத்து 63,000 ஒதுக்கப்பட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.  விழா மேடை, வாடிவாசல், பார்வையாளர் மேடை மற்றும் தடுப்பு வேலிகள் , ஜல்லிக்கட்டு காளைகளுக்கான கால்நடை பராமரிப்புத்துறை பரிசோதனை  மையம், ஜல்லிக்கட்டு காளைகள் சேகரிப்பு மையம் மற்றும் மாடுபிடி வீரர்கள் பரிசோதனை மையம் ஆகியவை தயார் நிலையில் உள்ளன.  

ஓய்வு பெற்ற நீதிபதி மாணிக்கம் தலைமையில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடத்த உத்தரவு !

கால்நடைத்துறை இணை இயக்குனர் நடராஜகுமார்,  உதவி இயக்குனர் சரவணன் தலைமையில் 30 கால்நடை மருத்துவர்கள் ,63 கால்நடை உதவி ஆய்வாளர்கள் போட்டியில் பங்கேற்கும் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு  மருத்துவ பரிசோதனை மேற்கொள்கின்றனர்.   மேலும் போட்டியின் போது ஏதேனும்  காயம் ஏற்பட்டால் உடனடியாக சிகிச்சையளிக்க  ஆம்புலன்ஸுகள் தயாராக வைக்கப்பட்டுள்ளன.  மேலும்,  மதுரை மாநகர காவல் ஆணையர் நரேந்திர நாயர்,  மதுரை தெற்கு காவல் உதவி ஆணையர் சாய் பிரணீத் ஆகியோர் தலைமையில் 1, 300 போலீசார்  பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

ஜல்லிக்கட்டு

வாடிவாசல், மாடுகள் நிறுத்தி வைக்கப்படும் இடம், அவனியாபுரம் பேருந்து நிலையம், பெரியார் சிலை மற்றும் வெள்ளைக்கல் பிரிவு, திருப்பரங்குன்றம் - முத்துப் பட்டி பிரிவு ஆகிய  5 இடங்களில்  கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.   மேலும் CCTV கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.  மதுரை மாநகராட்சி மருத்துவ அலுவலர் டாக்டர் வினோத்குமார் தலைமையில் 30 மருத்துவர்கள், 54 செவிலியர்கள் உதவியாளர்கள் அடங்கிய குழுவினர்,  3 பிரிவுகளாக மாடுபிடி வீரர்கள் பரிசோதனை செய்யும் பணிகளை செய்கின்றனர். மேலும்  போட்டியின் போது  வீரர்கள் மற்றும் பொதுமக்களுக்கு  முதலுதவி சிகிச்சை அளிக்கவும்  அவனியாபுரம் அரசு பள்ளியில் மருத்துவ குழுவினர் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.