நத்தம் அருகே பாதியில் நிறுத்தப்பட்ட ஜல்லிக்கட்டு!

 
ஜல்லிக்கட்டு

கொசவபட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் முறையாக விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை எனக் கூறி போட்டியை பாதியிலேயே காவல்துறை நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. 


திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள கொசவபட்டியில் உள்ள புனித உத்திரியமாதா  அந்தோணியார் பேராலய ஆண்டு திருவிழாவை ஒட்டி ஆண்டுதோறும் தை மாதம் நடைபெறும் ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு போட்டி நடைபெறும். இந்தாண்டுக்கான ஜல்லிக்கட்டுப்போட்டி இன்று காலை விமரிசையாக தொடங்கியது. 

போட்டியின் 8-வது சுற்றுக்கள் முடிவடைந்த நிலையில் 420 காளைகள், 200 காளையர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு, களம் இறங்கி விளையாடினர். ஏராளமான காளைகள் களத்தில் நீண்ட நேரம் நின்று விளையாடி பார்வையாளர்களை வசப்படுத்தியது. அவர்கள் கரகோஷம் எழுப்பியும் ஆரவாரம் செய்தும் உற்சாகத்தை வெளிப்படுத்தினர். பல காளையர்கள் காளைகளின் திமிலை பிடித்து அடக்கி பரிசினை பெற்று சென்றனர்.

இந்நிலையில் மதியம் 2 மணி அளவில் 465க்கும் மேற்பட்ட காளைகள்  களமிறங்கிய நிலையில், நூற்றுக்கும் மேற்பட்ட காளைகள் வாடிவாசல் பின்னே களமிறங்க காத்திருந்தன. அப்போது சம்பவ இடத்திற்கு நேரில் வந்து பார்வையிட்ட திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்  பாஸ்கரன் போட்டி முறையாக நடத்தப்படவில்லை என்றும் அரசு அறிவித்த விதிமுறைகளை முறையாக கடைபிடிக்கப்படவில்லை என்றும் இதில் பார்வையாளர்கள் உட்பட பலரும் காயம் அடைந்து வருவதையும் சுட்டிக்காட்டி போட்டியை பாதியிலேயே நிறுத்த உத்தரவிட்டார்.

அவரது உத்தரவை தொடர்ந்து கொசவபட்டி  ஜல்லிக்கட்டு போட்டி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. மேலும் இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் மொத்தம் 21 பேர் காயமடைந்துள்ளனர். இதில் மாடுபிடி வீரர்கள் 5 பேர், மாட்டின் உரிமையாளர்கள் 5 பேர், பார்வையாளர்கள் 11 பேர் காயமடைந்துள்ளனர். இந்த 21 பேரில் பத்து பேர் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.