இது இதோடு நின்றுவிடாது.. ஆவின் பால் விலை உயர்வுக்கு ஓபிஎஸ் கண்டனம்..

 
ஓபிஎஸ்

ஆவின் நிறுவனம்  ஆரஞ்சு பால் பாக்கெட்டின் விலையை 48 ரூபாயில் இருந்து 60 ரூபாய்க்கு உயர்த்தியுள்ளது கடும் கண்டனத்திற்குரியது என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.  

 இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் பொருட்கள் ஆவின் பால் வழியில் லிட்டருக்கு ரூ. 3  குறைத்த திமுக,   அதனால் ஏற்படும் இழப்பினை ஈடு செய்வதாக  இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் பால் உப பொருட்களான தயிர்,  நெய் பாதாம் பவுடர்,  ஐஸ்கிரீம் வகைகள் போன்றவற்றின் விலை 20% வரை உயர்த்தியது. இதனைத் தொடர்ந்து பொட்டலங்களில் அடைக்கப்பட்ட பல்வேறு பொருட்கள் மற்றும் சேவைகள் வரியை மத்திய அரசு விதித்திருப்பதை சுட்டிக்காட்டி மீண்டும் நெய்,  தயிர்,  மோர் ஆகியவற்றின் விலைகளை ஜிஎஸ்டி வரிக்கு மேல் இரண்டு மடங்கு விலையை உயர்த்தியது.

ஆவின் பால் விலை

தற்போது ஒரு லிட்டர் ஆரஞ்சு பால் பாக்கெட்டின் விலையை  60 ரூபாயாக  ஆவின் நிறுவனம் உயர்த்தி இருப்பதாக அறிவித்துள்ளது.  ஒரு லிட்டர் பால் விலை 12 ரூபாய் அளவிற்கு அதாவது 25 விழுக்காடு அளவுக்கு உயர்த்தப்பட்டிருக்கிறது. கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ. 10  உயர்த்தி தரவேண்டும் என்று விவசாயிகளும் பால் விற்பனையாளர்களும் கோரிக்கை விடுத்த நிலையில் 3 ரூபாய் மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது.  மொத்தத்தில் பொதுமக்களும்,  பால் உற்பத்தியாளர்களும் ஏமாற்றப்பட்டு இருக்கிறார்கள்.

இது  இதோடு நின்றுவிடாது.. பால் விலை உயர்வுக்கு ஓபிஎஸ் கண்டனம்..

இதுஇதோடு நின்று விடாது . அடுத்ததாக,  பச்சை பாக்கெட் பால் வகையை உயர்த்துதல், நீல பாக்கெட் பால் விநியோகத்தை குறைத்தல்,  இறுதியாக அனைத்து பாக்கெட் பால் விலைகளையும் உயர்த்துதல் போன்ற மக்கள் விரோத நடவடிக்கைகளை தான் திமுக அரசு படிப்படியாக எடுக்கும் என்ற மனநிலைக்கு மக்கள் வந்து விட்டார்கள். ஏழை எளிய மக்களை வஞ்சிக்க கூடாது என்கிற எண்ணம் உண்மையிலேயே திமுக அரசுக்கு இருக்குமேயானால்,  பால் விலை உயர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.  கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ. 10  உயர்த்தவும் முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுப்பதோடு,  மக்களை ஏமாற்றுகின்ற திமுக அரசை மக்கள் நிராகரிக்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்