சென்னை பல்கலைக்கழக வினாத்தாள் குளறுபடி - விசாரணை குழு அமைப்பு

 
tn assembly

சென்னை பல்கலைக்கழக வினாத்தாள் குளறுபடியை விசாரிக்க, விசாரணை குழு அமைத்து தமிழக உயர்க்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 
 
சென்னை பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட இணைப்பு கல்லூரிகள், உறுப்பு கல்லூரிகளில் நேற்று இரண்டாம் ஆண்டிற்குரிய மூன்றாவது செமஸ்டர் தமிழ் பாடத் தேர்வு நடைபெற்றது.  இதில் 3வது செமஸ்டர் தேர்வு தமிழ் வினாத்தாளுக்கு பதிலாக கடந்தாண்டு நடைபெற்ற 4வது செமஸ்டர் தமிழ் வினாத்தாள் விநியோகம் செய்யப்பட்டது. இதனால் மாணவர்கள் அதிர்ச்சியடைந்த நிலையில், தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.  இந்த சம்பவம் தொடர்பாக நேற்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, சென்னை பல்கலைக்கழகத்தில் நடந்த வினாத்தாள் குளறுபடி குறித்து உரிய விசாரனை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். தேர்வு உரிய முறையில் நடைபெற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார். 

இந்நிலையில், சென்னை பல்கலைக்கழக வினாத்தாள் குளறுபடியை விசாரிக்க, விசாரணை குழு அமைத்து தமிழக உயர்க்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த குழு தேர்வு வினாத் தாள் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும். இதனையடுத்து வினாத் தாள் குளறுபடிக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.