தென்னை மரம் ஏறுபவர்களுக்கான காப்பீட்டுத் திட்டம் - வேளாண்மை உழவர் நலத்துறை அழைப்பு

 
mrk

தென்னை மரம் ஏறும் தொழிலாளர்களின் பாதுகாப்பிற்காக, தென்னை மரம் ஏறுபவர்களுக்கான காப்பீட்டுத் திட்டத்தில் இணைந்து தொழிலாளர்கள் பயன்பெறுமாறு வேளாண்மை-உழவர் நலத்துறை அழைப்பு விடுத்துள்ளது.


வேளாண் தொழிலாளர்களின் பாதுகாப்பிற்காக, தமிழ்நாடு அரசு கலைஞரின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், வயதானோர்களுக்கான ஓய்வூதியம், கல்வி, மருத்துவச் செலவு, விபத்து உள்ளிட்ட பல்வேறு வகைகளில் உதவி வருகிறது. ஒன்றிய அரசின் தென்னை வளர்ச்சி வாரியம் தென்னை விவசாயிகள் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதில் தென்னை மரம் ஏறுபவர்களுக்கான காப்பீட்டுத் திட்டம் முக்கியமானதாகும். 

tn govt

தென்னை மரம் ஏறுபவர்களுக்கான காப்பீட்டுத் திட்டத்தின் (Kera Suraksha Insurance Scheme) நோக்கம்:

தற்போது, தென்னை மரங்களில் தேங்காய் அல்லது இளநீர்க் காய்களை பறித்தல், நீரா பானம் இறக்குதல், பழைய தென்னை ஓலைகளை அகற்றுதல் போன்ற பணிகளுக்காக, வேளாண் தொழிலாளர்கள் கிடைப்பது அரிதாக உள்ளது. தென்னை மரம் மிகவும் உயரமாக இருப்பதால், மரம் ஏறும் தொழிலாளர்கள் எதிர்பாராத விதமாக விபத்துக்களை சந்திக்கிறார்கள். இதனால், இத்தொழிலாளர்களுக்கு உடல் பாதிப்பு ஏற்படுகிறது. சில சமயங்களில் இவ்விபத்தினால் உயிரிழப்பும் நிகழ்வதுண்டு. எனவே, இத்தகைய ஆபத்துகள் நிறைந்த இப்பணிகளை மேற்கொள்ளும் வேளாண் தொழிலாளர்களின் நலனைப் பாதுகாப்பதற்காக, தென்னை வளர்ச்சி வாரியத்தால் இக்காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 

இக்காப்பீட்டுத்திட்டத்தின் மூலம் கிடைக்கும் பலன்கள்:

stalin
தென்னை மரம் ஏறும்போது விபத்து ஏற்பட்டு. 24 மணி நேரத்திற்குள் உயிர் இழப்பு அல்லது நிரந்தரமாக முழு உடல் ஊனம் அடைந்தால், ரூ.5 இலட்சம் இழப்பீட்டுத் தொகையாக அவரின் வாரிசுதாரருக்கு வழங்கப்படுகிறது. நிரந்தரமாக, பகுதி உடல் ஊனம் அடைந்தால், ரூ.2.5 இலட்சம், மருத்துவ செலவுகளுக்கு அதிகபட்சமாக ரூ.1 இலட்சம். தற்காலிக முழு உடல் ஊனத்திற்கு ரூ.18,000/-. உதவியாளர் செலவுக்காக ரூ.3,000/-, ஆம்புலன்ஸ் செலவுக்காக ரூ.3,000/- மற்றும் இறுதி சடங்கு செலவுக்காக ரூ.5,000/- பெற்றுக் கொள்ளலாம்.

செலுத்த வேண்டிய காப்பீட்டுக் கட்டணத்தொகை

இத்திட்டத்தின் கீழ் காப்பீடு செய்து கொள்ள வருடந்தோறும் ரூ.375/- காப்பீட்டுத் தொகையாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில், தென்னை மரம் ஏறும் தொழிலாளர்கள் தங்களின் பங்குத் தொகையாக 25 சதவிகிதத் தொகை அதாவது வருடத்திற்கு ரூ.94/- மட்டுமே செலுத்தினால் போதுமானது. தென்னை மரம் ஏறும் தொழிலாளர்களின் நலனுக்காக, மீதமுள்ள 75 சதவீதத் தொகையான ரூ.281/-யை தென்னை வளர்ச்சி வாரியமே செலுத்துகிறது. கடந்த 2021-22 ஆம் ஆண்டில் 940தொழிலாளர்களும், நடப்பு 2022-23 ஆம் ஆண்டில் இதுவரை 100 தொழிலாளர்களும் இத்திட்டத்தில்
பதிவு செய்துள்ளனர்.

எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும்?

mrk

பயனாளிகள் தென்னை வளர்ச்சி வாரியத்தின் இணையதள் விருப்பமுள்ள முகவரி http://www.coconutboard.gov.in/ல் உள்ள விண்ணப்பத்தில், பெயர், ஆதார் எண், கைபேசி எண். இருப்பிட முகவரி, பிறந்த தேதி, வாரிசு நியமனம் உள்ளிட்ட விபரங்களுடன். உங்கள் பகுதி வட்டார வேளாண்மை அலுவலரின் சான்றிதழுடன் காப்பீட்டுத் தொகையை வரைவோலையாகவோ, கூகுள் பே (Google Pay) அல்லது பேடீஎம் (PayTM) அல்லது போன்பே (Phonepay) மூலமாகவோ பணம் செலுத்தி இத்திட்டத்தில் சேரலாம். இது தொடர்பாக சந்தேகம் இருந்தால், உங்கள் வட்டாரத்தில் உள்ள வேளாண்மைத் துறை அலுவலர்களை அணுகலாம்.
தென்னை மரம் ஏறும் வேளாண் தொழிலாளர்களின் நலனுக்காக தென்னை வளர்ச்சி வாரியம் செயல்படுத்தும் இக்காப்பீட்டுத் திட்டத்தில் அதிக தொழிலாளர்கள் இணைந்து பயன்பெறுமாறு தமிழ்நாடு அரசின் வேளாண்மை-உழவர் நலத்துறை கேட்டுக்கொள்கிறது.