அதிகரிக்கும் காய்ச்சல்.. மருத்துவமனைகளில் நிரம்பும் குழந்தைகள் வார்டுகள்..

 
fever


அதிகளவு பரவி வரும்  காய்ச்சல் பாதிப்புகள் காரணமாக மருத்துவமனைகளில் குழந்தைகளுக்கான வார்டுகள் வேகமாக நிரம்பி வருகின்றன.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு விதமான காய்ச்சல்கள் வேகமாக பரவி வருகின்றன.  இதன் காரணமாக புதுச்சேரியில்  8 ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன. இதேபோல் தமிழகத்திலும் பள்ளிகளுக்கு விடுமுறை  அளிக்க வேண்டும் என கோரிக்கை வலுத்து வருகிறது.  இந்நிலையில்  சென்னை எழும்பூர் அரசு மருத்துவமனையில் 130 க்கும் மேற்பட்ட குழந்தைகள் காய்ச்சல் பாதிப்பால் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.   அதேபோல் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் 30க்கும் மேற்பட்ட குழந்தைகளும்,  கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 12 குழந்தைகளும்,  ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் 20க்கும் மேற்பட்ட குழந்தைகளும்,   காஞ்சி காமகோடி மருத்துவமனையில் உள்ள  180 படுக்கைகளில்,  160 க்கும் மேற்பட்ட குழந்தைகளும்  அனுமதிக்கப்பட்டுள்ளனர்.   இவை அனைத்துமே காய்ச்சல் பாதிப்பு  காரணமாக   அனுமதிக்கப்பட்டுள்ள குழந்தைகள்.

அதிகரிக்கும் காய்ச்சல்.. மருத்துவமனைகளில் நிரம்பும் குழந்தைகள் வார்டுகள்..

 இந்த காய்ச்சல் பாதிப்பு  குறித்து, சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துமனை  முதல்வர் ஜெயந்தி கூறியதாவது, “ ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் முதல் டிசம்பர் வரை காய்ச்சல் இருப்பது பொதுவானதே.  ஆனால் இந்த ஆண்டு சற்று கூடுதலாகவே காய்ச்சல் பாதிப்பு பதிவாகி வருகிறது. காலநிலை மாற்றம் மற்றும்  கடந்த இரண்டு ஆண்டுகளாக குழந்தைகள் வெளியே வராததும் பாதிப்பு அதிகமாக இருப்பதற்கு முக்கிய காரணமாக இருக்கலாம்.  ஆனால் இதற்காக பயப்பட வேண்டியதில்லை.  குழந்தைகளுக்கு காய்ச்சல் தாமதமாகவே தெரிய வரும்.  சோர்வாக இருப்பது,   சரியாக உணவு எடுத்துக் கொள்ளாதது, வாந்தி எடுப்பது,  சரியாக சிறுநீர் கழிக்காமல் இருப்பது போன்றவை குழந்தைகளுக்கான காய்ச்சல் அறிகுறிகள்.  இதனை பெற்றோர் கட்டாயம் கவனிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

அதிகரிக்கும் காய்ச்சல்.. மருத்துவமனைகளில் நிரம்பும் குழந்தைகள் வார்டுகள்..

மேலும்,  இருமல்,  சளி,  மூக்கடைப்பு,  மூக்கு ஒழுகுதல்,  நெஞ்சு சளியாக கோர்த்தல் போன்றவற்றையும் பெற்றவர் உன்னிப்பாக கவனிக்க வேண்டும். 5 நாட்களுக்கும் மேல் காய்ச்சல் நீடித்தால் கட்டாயம் மருத்துவரை அணுக வேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும்,  குழந்தைகளுக்கு எந்த விதமான காய்ச்சலாக இருந்தாலும் நீர்சத்து குறைவதை சரிசெய்வது முதல் விஷயமாக இருக்க வேண்டும்.  அதற்கு உப்புகரைசல் கொடுக்க வேண்டும்.  அரசு மருத்துவமனைகளில் உப்பு கரைசல் பொட்டலங்கள்   இலவசமாக விநியோகிக்கப்படுகின்றன.   இதை அவசியம் எல்லோரும் அவர்களது வீட்டில் வைத்திருக்க வேண்டும். ” என்றும்  தெரிவித்தார்.