பரம்பரை மருத்துவர்களுக்கு முதியோர் ஓய்வூதிய தொகை உயர்வு - முதல்வர் ஆணை!!

 
tn

தமிழ்நாடு இந்திய மருத்துவக் கழகத்தில் பதிவு செய்துள்ள பரம்பரை மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ரூ.1000/- மாதாந்திர ஓய்வூதியத்தை ரூ.3000/- ஆக உயர்த்தி வழங்குவதற்கான ஆணையினை  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  இன்று (22.9.2022) தலைமைச் செயலகத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், தமிழ்நாடு இந்திய மருத்துவக் கழகத்தில் பதிவு செய்துள்ள 61 பரம்பரை சித்தா, ஆயுர்வேதா, யுனானி மற்றும் ஓமியோபதி மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ரூ.1000/- மாதாந்திர ஓய்வூதியத்தை ரூ.3000/-ஆக உயர்த்தி வழங்குவதற்கான ஆணையினை வழங்கிடும் அடையாளமாக 11 ஓய்வுபெற்ற பரம்பரை மருத்துவர்களுக்கு ஓய்வூதியத்திற்கான ஆணைகளை வழங்கினார்.

tn

தமிழ்நாடு இந்திய மருத்துவக் கழகத்தில் பதிவு செய்து கொண்ட பரம்பரை சித்த மருத்துவர்களில் 60 வயதிற்கு மேற்பட்ட மருத்துவர்களின் வறுமை நிலையினை களைய உதவும் வகையில் மாதம் ரூ.500/ஓய்வூதியமாக வழங்கப்பட்டு வந்தது. இது பின்னர் 60 வயதிற்கு மேற்பட்ட பதிவுபெற்றுள்ள பரம்பரை ஆயுர்வேதா, யுனானி, மற்றும் ஓமியோபதி மருத்துவர்களுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டது. பின்னர் இந்த ஓய்வூதியமானது டிசம்பர் 2011ஆம் ஆண்டு ரூ.1000/- ஆக உயர்த்தப்பட்டது.

tn

தற்போது நிலவிவரும் பொருளாதார சூழ்நிலையின் அடிப்படையில், தங்களுக்கு வழங்கப்பட்டுவரும் மாதாந்திர ஓய்வூதியமான ரூ.1,000/தங்களின் குறைந்தபட்ச வாழ்வாதார தேவைகளுக்கு போதுமானதாக இல்லை எனவே தங்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர ஓய்வூதியத்தினை ரூ.1,000/-லிருந்து ரூ.3,000/- ஆக உயர்த்தி வழங்கிட பதிவுபெற்றுள்ள பரம்பரை ஆயுர்வேதா, யுனானி, மற்றும் ஓமியோபதி மருத்துவர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். அதன் அடிப்படையில், 2022-23ஆம் ஆண்டு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மானியக் கோரிக்கையில், சித்தா, ஆயுர்வேதா, யுனானி மற்றும் ஓமியோபதி பரம்பரை மருத்துவர்களுக்கு மாதந்தோறும் வழங்கப்பட்டு வரும் ரூ.1000/- ஓய்வூதியம், நடப்பு ஆண்டு முதல் ரூ.3000/ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

tn

அதன்படி, தமிழ்நாடு இந்திய மருத்துவக் கழகத்தில் பதிவு செய்துள்ள 61 பரம்பரை சித்தா, ஆயுர்வேதா, யுனானி மற்றும் ஓமியோபதி மருத்துவர்கள் பயன்பெறும் வகையில் உயர்த்தப்பட்ட ஓய்வூதியத் தொகையான ரூ.3000/-க்கான ஆணைகளை பரம்பரை மருத்துவர்களுக்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வழங்கினார்.