கந்துவட்டி பிரச்சனையில் அடிதடி- ஒருவர் பலி

 
murder

சென்னையில் கந்து வட்டி பிரச்சனையில் ஏற்பட்ட அடிதடியில் இறைச்சி கடை உரிமையாளர் ஏஜாஸ் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

murder

சென்னை துரைப்பாக்கம்,பாலாஜி நகர் 3-வது தெருவை சேர்ந்தவர் ஏஜாஸ் (வயது32)- ஆயிஷா தம்பதி, அதே பகுதியில் இறைச்சிக் கடையை நடத்தி வருகின்றனர். ஒரு வருடத்திற்கு முன்பாக இந்த தம்பதிக்கு திருமணம் நடைபெற்றுள்ள நிலையில், திருமண செலவிற்காக ஸ்ரீதரன் என்பவரிடம் 40 ஆயிரம் ரூபாய் கந்து வட்டியில் கடனாக பெற்றுள்ளார். வாரம் ஒருமுறை 2 ஆயிரம் ரூபாய்  வட்டியும், கட்டாயத்தின் அடிப்படையில் ஸ்ரீதருக்கு அவ்வப்போது 2 கிலோ இறைச்சிகளை இலவசமாகவும் வழங்கி வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த மாட்டுப் பொங்கல் அன்று வட்டி பணத்தை வசூல் செய்வதற்காக ஸ்ரீதரன் கடைக்கு சென்று உள்ளார், அங்கு ஏஜாஸ்,ஸ்ரீதரன் இடையே சலசலப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் கோபமடைந்த ஸ்ரீதரன்,  இறைச்சிக் கடையை மூடிவிட்டு வீட்டுக்கு சென்ற ஏஜாஸ்-ஐ செல்லும் வழியில் மடக்கி பிடித்து அடித்ததாக கூறப்படுகிறது. இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு  இரண்டு நாட்களாக ரத்த வாந்தி எடுத்துள்ளார். அதனை தொடர்ந்து மேலும் உடல்நிலை மோசமாக இருக்கவே, சிகிச்சைக்காக நேற்று, சென்னை ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மூலையில் ரத்த கசிவு ஏற்பட்டதால் சிகிச்சை பலனின்றி, ஏஜாஸ் உயிரிழந்துள்ளார்.வட்டி பணத்திற்காக கொல்லப்பட்ட ஏஜாஸ் மனைவி, 7 மாத கர்ப்பிணியாக உள்ளாதாகவும், ஸ்ரீதரனுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் எனவும் அவரது உறவினர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். 


இந்த சம்பவம் தொடர்பாக துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டு, ஸ்ரீதரன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறு வயதில் இருந்து நண்பர்களாக  பழகி வந்த இருவர் இடையே கந்து வட்டி பிரச்சினையால் அடிதடி ஏற்பட்டு ஒருவர் உயிரிழந்து மற்றொவர் சிறைக்கு சென்றுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.