5G ஏலத்தில் ரூ. 3.5 லட்சம் கோடி மோசடி - கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு..

 
ks alagiri


5ஜி அலைக்கற்றை ஏலத்தில் சுமார் ரூ. 3.5 லட்சம் கோடி  அளவிற்கு மோசடி நடந்திருப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர்  வெளியிட்டுள்ள அறிக்கையில், “5ஜி அலைக்கற்றை ஏலம் நடைபெறுவதற்கு முன்பு, இந்த ஏலம் மூலம் 5 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு மத்திய அரசுக்கு வருமானம் கிடைக்கும் என மத்திய அமைச்சர்கள் சிலர் ஆரூடம் கூறினர். ஆனால் தற்போது இந்த ஏலம் மூலம், 1,50,173 கோடி ரூபாய் மட்டுமே வருமானம் கிடைத்திருப்பதாக மத்திய பாஜக அரசு அறிவித்திருப்பது நாட்டுமக்களுக்கு பேரதிர்ச்சி அளித்திருக்கிறது. மத்திய அரசின் சொந்த நிறுவனமான பிஎஸ்என்எல் இந்த நிறுவனத்தில் பங்கேற்காமல், முழுக்க முழுக்க தனியார் நிறுவனங்கள் மட்டுமே 5ஜி ஏலத்தில் பங்கேற்றது, மோடி அரசின் பாரபட்சமான அணுகுமுறையையே காட்டுகிறது.  

5G spectrum auctions

முன்னர் 4ஜி அலைக்கற்றை ஏலம் நடந்தபோது அரசுக்கு கிடைத்த வருவாயை ஒப்பிடுகையில், 5ஜி ஏலத்தில் 134 மடங்கு அதிக வருவாய் கிடைத்திருக்க வேண்டும், ஆனால் 5ஜி ஏலத்தில் மத்திய அரசுக்கு கிடைத்ததோ சுமார் 1.5 லட்சம் கோடி ரூபாய் மட்டுமே. அதாவது 5ஜி ஏலத்தில் சுமார் ரூ. 3.5 லட்சம் கோடி  அளவிற்கு மோசடி நடந்துள்ளது.  அரசுக்கு கிடைத்திருக்க வேண்டிய லட்சக்கணக்கான கோடி ரூபாயை, இந்த மோசடி மூலம் சில தனியார் நிறுவனங்களுக்கு மத்திய பாஜக அரசு மடைமாற்றிவிட்டுள்ளது.

ks alagiri

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் 2ஜி மற்றும் 3ஜி அலைக்கற்றை மூலமே செல்போன் சேவையை வழங்க நிர்பந்திக்கும் மத்திய பாஜக அரசு, தனியார் நிறுவனங்களைப் போல் அதி நவீன 4ஜி சேவையை பிஎஸ்என்எல். வழங்க அனுமதிக்காதது கண்டிக்கத்தக்கது. 5ஜி அலைக்கற்றை ஏலத்தை நிச்சயம் நீதிமன்ற ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். இந்த விவகாரத்தில் விசாரணையிலிருந்து மத்திய பாஜக அரசு தப்ப முடியாது.” என்று குறிப்பிட்டுள்ளார்.