ஃபைனான்சியர் அன்புச்செழியன் வீட்டில் ஐ.டி ரெய்டு.. கணக்கில் வராத ரூ. 200 கோடி கண்டுபிடிப்பு..

 
சினிமா பைனான்சியர் அன்புச் செழியன் வீட்டில் சோதனை


சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில்  கணக்கில் வராத  200 கோடி ரூபாயை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   

சினிமா பைனான்சியர் அன்புச்செழியனுக்குச்  சொந்தமான வீடு மற்றும் அவருடைய உறவினர்கள் வீடுகளில் கடந்த 4 நாட்களாக  வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டது.   வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து பைனான்சியர் அன்புச்செல்வனின் வீட்டில்  முதலில் இந்த சோதனை தொடங்கியது. பின்னர் சினிமா தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ். தானு, எஸ்.ஆர்.பிரபு,  ஞானவேல் ராஜா, டி. ஜி. தியாகராஜன்,  சீனிவாசன் உள்ளிட்ட  திரைத்துறையின் முக்கிய புள்ளிகள் வீடுகள் மற்றும் அலுவலகங்களிலும் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர்.

வருமான வரித்துறை

இதில் பைனான்சியர் அன்புச்செழியனுக்குச் சொந்தமான 40 இடங்களில்   சோதனை நடைபெற்று வந்தது. சென்னையில் 10 இடங்களிலும், மதுரையில் சுமார் 30 இடங்களிலும்  கடந்த 4 நாட்களாக  நடைபெற்று வந்த வருமான வரித்துறை சோதனை இன்று நிறைவடைந்தது.  இந்த  சோதனையில்  கணக்கில் வராத  ரூ. 200 கோடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. 

சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் வீட்டில் ஐடி ரெய்டு!

இவைதவிர  திரையரங்குகளில் இருந்து கிடைத்த வருமானத்தை மறைத்ததாகவும் வருமான வரித்துறையினர் குறிப்பிட்டுள்ளனர். மேலும்,  பல்வேறு இடங்களில் நடைபெற்ற சோதனையில் கணக்கில் வராத 26 கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும்,  சுமார் 3 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தெரிவித்திருக்கின்றனர். அத்துடன்  இன்னும் சில இடங்களில் சோதனை நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டிருக்கிறது.