"ஐஐடிகளுக்கு இட ஒதுக்கீடு என்றாலே கசக்கிறது" - தொடரும் இட ஒதுக்கீடு மீறல்கள்!!

 
mp

மக்களவையில் ஐ.ஐ டி முனைவர் பட்ட அனுமதிகளில் எவ்வளவு ஓ. பி. சி, எஸ்.சி, எஸ்.டி மாணவர்கள் இடம் பெற்றுள்ளார்கள்? மொத்தம் எவ்வளவு பேர் விண்ணப்பித்தார்கள்?  இட ஒதுக்கீடு பிரிவினருக்கான இடங்கள் எவ்வளவு காலியாக உள்ளன?  என்ற கேள்வியை சு. வெங்கடேசன் எழுப்பினார்.அதற்கான 29 பக்கங்கள் கொண்ட பதிலை ஒன்றிய இணை அமைச்சர் டாக்டர் சுபாஷ் சர்க்கார் அளித்துள்ளார். 

su venkatesan

அதில் தரப்பட்டுள்ள தகவல்கள் எப்படி முனைவர் பட்ட அனுமதிகள் எஸ்.சி, எஸ்.டி, ஓ பி சி பிரிவினருக்கு அநீதியை இழைக்கின்றன என்பதை விவரிக்கிறது. இட ஒதுக்கீடு அடியோடு சிதைக்கப்பட்டுள்ளது.
போதுமான விண்ணப்பதாரர்கள் இருந்தும் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு இருப்பது அதிர்ச்சியை தருகிறது. வழக்கமாக அரசு சொல்லும் காரணமும் இங்கே அடிபட்டு போயிருக்கிறது. 
இட ஒதுக்கீடு நெறிகளின்படி ஐ.ஐ.டி க்கள் எஸ்.டி 7.5 சதவீதம், எஸ்.சி 15 சதவீதம், ஓ. பி.சி 27 சதவீதம் இடங்களை தந்திருக்க வேண்டும். 

அமைச்சர் தந்துள்ள தகவல்களின்படி எஸ்.டி பிரதிநிதித்துவம் 2.5 சதவீதமாகவே இருக்கிறது. 3430 விண்ணப்பதாரர்கள் இருந்தும் எல்லா ஐ.ஐ.டி களிலும் சேர்த்து மொத்தம் 137 பேருக்கு மட்டுமே அனுமதி கிடைத்துள்ளது. எந்த ஐ.ஐ டி யுமே உரிய பிரதிநிதித்துவத்தை தரவில்லை. மூன்று ஐ.ஐ.டி க்கள் (கோவா, பிலாய், திருப்பதி) முறையே 30, 31, 93 விண்ணப்பங்களை வரப் பெற்றும் அவர்கள் அனுமதி தந்தது ஜீரோ சதவீதம். 

iit

எஸ்.சி  பிரதிநிதித்துவம் 10 சதவீதமாகவே இருக்கிறது. 17075 விண்ணப்பதாரர்கள் இருந்தும் எல்லா ஐ.ஐ.டி களிலும் சேர்த்து மொத்தம் 574 பேருக்கு மட்டுமே அனுமதி கிடைத்துள்ளது. எல்லா ஐ.ஐ டி களுமே- கோவா, தன்பாத் தவிர - உரிய எஸ்.சி பிரதிநிதித்துவத்தை தரவில்லை. சென்னை ஐ.ஐ.டியில் எஸ்.சி, எஸ்.டி பிரதிநிதித்துவம் முனைவர் பட்ட அனுமதிகளில் மிக மிகக் குறைவாக உள்ளது. மொத்தம் 558 மாணவர்கள் முனைவர் பட்ட அனுமதிகளை பெற்றுள்ள நிலையில் 53 மாணவர்கள் மட்டுமே (9.5 சதவீதம்) எஸ்.சி பிரிவை சார்ந்தவர்கள். 20 பேர் மட்டுமே (3.6 சதவீதம்) எஸ்.டி பிரிவை சேர்ந்தவர்கள். ஆனால் எஸ்.சி மாணவர்கள் 1637 பேரும், எஸ்.டி மாணவர்கள் 346 பேரும் தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களாக இருந்துள்ளனர். எஸ்.சி மாணவர் இடங்கள் 23, எஸ்.டி மாணவர் இடங்கள் 13 காலியாக விடப்பட்டுள்ளன. 

கல்வி நிறுவன நிதியில் இருந்து நடத்தப்படும் பிரிவுகள் மட்டுமின்றி திட்டம்/வெளி ஆதரவு நிதி மூலம் நடத்தப்படும் பிரிவுகளிலும் இட ஒதுக்கீடு அமலாகவில்லை. ஓ. பி.சி இட ஒதுக்கீடும் ஓரளவே தரப்பட்டுள்ளது. இதில் சென்னை ஐ.ஐ டி மட்டுமே விதி விலக்காக உள்ளது.  இட ஒதுக்கீடு என்பது பிரதிநிதித்துவத்திற்கான குறைந்த பட்ச சதவீதமே ஆகும். அதை எட்டவே இந்த பாடு. சட்டம் வந்து 16 ஆண்டுகள் கழித்தும் இதுவே நிலைமை. மத்திய கல்வி நிறுவனங்கள் (மாணவர் அனுமதி இடஒதுக்கீடு) சட்டம் 2006 இடஒதுக்கீட்டை ஒவ்வொரு கல்விப் பிரிவிலும் அனுமதிக்கப்பட்ட ஆண்டு எண்ணிக்கையில் (Annual Permitted Strength) உறுதி செய்ய வேண்டும் என கட்டளை இடுகிறது. ஆனால் ஐ.ஐ.டி கள் அரசியலமைப்பு சட்டத்தை விட "மனு தர்மத்தையே" மதிக்கிறது போல. ஆகவே அனுமதிக்கப்பட்ட ஆண்டு எண்ணிக்கையை  (Annual Permitted Strength) எந்த நெறிகளுக்கும் உட்படாமல் நிர்ணயித்து கொள்கின்றன. இதன் மூலம் இட ஒதுக்கீட்டை நீர்க்க செய்கிறார்கள். ஐ.ஐ.டி கோரக்பூர் கல்வி நிறுவன நிதியில் நடத்தப்படும் பிரிவுகளுக்கு (Institute funded) "நிலையான அனுமதி எண்ணிக்கையையே" (Fixed Annual Strength) வைத்திருப்பது மீறலி்ன் உச்சம் ஆகும். 

Parliament

"உயர்ந்த" கல்வி நிறுவனங்கள் என்று தங்களை தம்பட்டம் அடித்துக் கொள்ளும் ஐ ஐ டி களின் சமூக நீதி குறித்த பார்வையும், அக்கறையும் தரை மட்டத்தில் உள்ளன. அனுமதி முறைமையில் வெளிப்படைத் தன்மை இல்லாததால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் முறையீடு செய்யக் கூட முடியவில்லை.  அரசு சட்டத்தின் அமலாக்கத்தை உறுதி செய்ய வேண்டும். நேர்மையான ஆய்வை, விசாரணையை செய்து மீறல்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  சு. வெங்கடேசன் எம் பி கோரியுள்ளார்.