தாங்க முடியாத அதிர்ச்சியும் , வேதனையும் அடைந்தேன் - வைகோ..

 
vaiko ttn

கீழ்பவானி முறை நீர் பாசன விவசாயிகள் கூட்டமைப்பின் தலைவர்  மறைந்தார் என்ற செய்தி அறிந்து தாங்க முடியாத அதிர்ச்சியும் வேதனையும் அடைந்ததாக வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், “25 ஆண்டுகளாக கூட்டமைப்பின் தலைவர் பதவியை மிகச் சிறப்புடன் செயல்படுத்தி, கீழ் பவானி பாசனத்தில் உள்ள இரண்டு லட்சத்திற்கு மேற்பட்ட ஏக்கர் நிலங்களுக்கு நீர் மேலாண்மை செய்வதற்கும், விவசாயிகளின் அனைத்துப் பிரச்சனைகளுக்காகவும் தமிழ்நாட்டிலும், டெல்லியிலும் நடைபெற்ற நிகழ்வுகள் அனைத்திலும் தவறாமல் கலந்து கொண்டு, அனைத்துத் தலைவர்களையும் சந்தித்து கோரிக்கைகளை வைத்து வந்தவர்.

கீழ்பவானி முறை நீர் பாசன விவசாயிகள் கூட்டமைப்பின் தலைவர் காசியண்ணன்

குறிப்பாக அடல் பிகாரி வாஜ்பாய் அவர்கள் பிரதமராக இருந்தபோது என்னுடைய ஆலோசனையின் பேரில் கணேசமூர்த்தி எம்பி அவர்களுடன் சென்று வாஜ்பாய் அவர்களைச் சந்தித்து, பாசன மேம்பாட்டு நிதியினைப் பெறுவதற்கு முன்நின்று செயல்பட்டார். அதன் மூலம் 4 கோடி ரூபாய் கீழ்பவானி பாசன திட்டத்திற்கு பெற்றுக் கொடுத்தவர் காசியண்ணன் ஆவார். இந்தியா முழுமைக்கும் உள்ள கரும்பு விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆயிரம் பேரை தனி ரயில் மூலம் கணேசமூர்த்தி எம்பி அவர்களின் உதவியோடு சென்னையில் இருந்து வழி அனுப்பி வைத்தேன். ஈரோட்டில் அவர் முன்நின்று நிறுவி நடத்திய அம்மனையம்மாள் கல்வி அறக்கட்டளை பள்ளி கிராமப்புற மாணவர்கள் குறைந்த கட்டணத்தில் பயிலவும், ஏழை வீட்டுப் பிள்ளைகள் கட்டணம் இன்றி பயிலவும் வழி வகை செய்தவர். மதுவுக்கு எதிராக நான் பிரச்சார நடை பயணம் மேற்கொண்ட போது, என்னுடன் நடை பயணத்தில் வந்த அனைவரையும் அவரது பள்ளியிலேயே தங்க வைத்தார்.

கீழ்பவானி முறை நீர் பாசன விவசாயிகள் கூட்டமைப்பின் தலைவர் காசியண்ணன்

மறுநாள் காலையில் பள்ளி மைதானத்திலேயே தொண்டரணி பயிற்சி நடைபெற்றது. காசியண்ணன் அவர்கள் திருமணமே செய்து கொள்ளவில்லை. கோடிக்கணக்கான சொத்துக்களுக்கு உரியவராக இருந்தாலும் மிகவும் எளிமையாக வாழ்ந்தவர். நான் ஈரோடு செல்லும் போதெல்லாம் என்னைச் சந்தித்து விவசாயிகள் கோரிக்கைகளைக் கூறுவார். கணேசமூர்த்தி நாடாளுமன்றத் தேர்தலில் வேட்பாளராகக் களம் கண்ட அனைத்துத் தேர்தலிலும் அவரது வெற்றிக்காகப் பணியாற்றுவார். பண்பாட்டுச் சிகரமான காசியண்ணன் அவர்களின் மறைவு விவசாயிகளுக்கு மட்டுமல்ல, மனிதநேயத்திற்கும் பேரிழப்பாகும். அவரது மறைவால் துயரத்தில் ஆழ்ந்துள்ள உற்றார் உறவினர்களுக்கும், விவசாய பெருமக்களுக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.