2வது திருமணம் செய்வதற்காக முதல் மனைவிக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய கணவர்

 
க

இரண்டாவது திருமணம் செய்வதற்காக முதல் மனைவி இறந்து விட்டதாகச் சொல்லி  கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்து மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார் வாலிபர்.

 மதுரை மாவட்டத்தில் அலங்காநல்லூர் அடுத்த அழகாபுரி.  இப்பகுதியை சேர்ந்த மோனிஷாவுக்கும் சிவகங்கை மாவட்டம் கண்டாங்கிபட்டி பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவருக்கும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. 

 பணி நிமித்தம் காரணமாக பாலகிருஷ்ணன் வெளிநாடு சென்று விட்டு கடந்த வருடம் தான் ஊர் திரும்பியிருக்கிறார்.   ஊர் திரும்பிய நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு நடந்து வந்திருக்கிறது.    கணவன் பாலகிருஷ்ணனுடன்  தகராறு செய்து வந்ததால் கணவருடன் கோபித்துக்கொண்டு தாய் வீட்டிற்கு சென்றிருக்கிறார் மோனிஷா.

ம்

 கடந்த சில மாதங்களாக பெற்றோர் வீட்டிலேயே வசித்து வந்திருக்கிறார்.   சண்டை போட்டு கோபித்துக்கொண்டு போன மனைவி வெகு நாட்களாகியும் வீட்டிற்கு திரும்பி வராததால் அவருடன் சேர்ந்து வாழ விருப்பம் இல்லாத பாலகிருஷ்ணன்,   வேறு ஒரு திருமணம் செய்து கொள்ள விரும்பி இருக்கிறார் .  

திருமணம் ஆனவர் என்பதால் அதை மறைக்க வேண்டிய விஷயம் வந்ததால் தனது மனைவி மோனிஷா இறந்து விட்டதாகச் சொல்லி வாட்ஸ்அப் ,முகநூலில் மனைவி மோனிஷாவுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் வைத்து உறவினர்களை நம்பவைத்து உறவுக்காரப் பெண்ணை இரண்டாம் திருமணம் செய்திருக்கிறார்.

 இது தாமதமாகத்தான் முதல் மனைவிக்கு தெரிய வந்திருக்கிறது.   வலைத்தளங்களில் தனது கண்ணீர் அஞ்சலி போஸ்டர் பார்த்து அதிர்ந்துபோன மோனிஷா,  தனக்கு தெரியாமல் வேறு ஒரு பெண்ணை இரண்டாவது திருமணம் செய்ததையும் அறிந்து ஆத்திரப்பட்ட அவர்,   சமயநல்லூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சென்று புகார் அளித்திருக்கிறார்.

 மோனிஷாவின் புகாரை பார்த்து போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.   முதல் மனைவி உயிரோடு இருக்கும்போது கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிவிட்டு இரண்டாவது திருமணம் செய்துகொண்டிருக்கும் கணவர் பாலகிருஷ்ணன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.