மனைவி கதவு திறக்காததால் பைப் மீது ஏறி சென்ற கணவர் மரணம்

 
s

கதவை திறக்கச் சொல்லி பலமுறை மனைவிக்கு போன் செய்து மனைவி ஃபோனை எடுக்காமல் அயர்ந்து தூங்கி விட்டதால் பின்பக்க பைப்லைன் வழியாக மூன்றாவது மாடிக்கு ஏறிச் சென்ற கணவர் தவறி கீழே விழுந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்திருக்கிறார்.

 திருப்பத்தூர் மாவட்டத்தில் நாட்றம்பள்ளி அருகே தாயப்பர் பகுதியில் வசித்து வருபவர் தென்னரசு.  மார்க்கெட்டிங் வேலை செய்து வரும் இந்த வாலிபருக்கு திருமணம் ஆகி புனிதா என்கிற மனைவியும் ஒரு குழந்தையும் உள்ளது.   இவர் நேற்று நள்ளிரவில் உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு வீடு திரும்பி இருக்கிறார். 

m

 வீட்டின் காலிங் பெல் வேலை செய்யாததால் கதவை திறக்கச் சொல்லி பலமுறை மனைவிக்கு போன் செய்திருக்கிறார்.  ஆனால் மனைவி அயர்ந்து தூங்கிவிட்டதால் போனை எடுக்காமல் இருந்திருக்கிறார்.  இதனால் பின்பக்க வழியாக பைப் லைன் வழியாக ஏறி மூன்றாவது மாடிக்கு சென்று விடலாம் என்று நினைத்து பைப்லைன் வழியாக ஏறி மாடிக்கு தாவி இருக்கிறார்.

 அப்போது கால் தவறி கீழே விழுந்து தலையில் பலத்த காயம்பட்டு இரத்த வள்ளத்தில் மயங்கி கிடந்திருக்கிறார்.  அதன் பின்னர் துடிதுடித்து உயிரிழந்திருக்கிறார். தூங்கி கண் விழித்த புனிதா செல்போனில் கணவனின் அழைப்புகள் இருப்பதை பார்த்துவிட்டு போன் செய்தும் எடுக்காததால் அவரது அண்ணனுக்கு போன் செய்திருக்கிறார். 

 அதை அடுத்து பதறிக்கொண்டு வந்த புனிதாவின் அண்ணன்,  தென்னரசுவின் செல்போனை தொடர்ந்து தொடர்பு கொண்ட போது,  வீட்டின் பின்புறத்தில் இருந்து செல்போன் ஒலித்து இருக்கிறது.  அங்கு சென்றபோது ரத்த வெள்ளத்தில் கிடந்து இருக்கிறார் தென்னரசு.  அவரை மீட்டு நாட்றம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று இருக்கிறார்கள்.  அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.