காதல் மனைவிக்கு வேறெருவருடன் திருமணம்- கணவர் போலீசில் புகார்

 
illegal love

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள அமயபுரத்தைச் சேர்ந்தவர் அஜீத்குமார் (வயது 25). தனியார் சிட்ஸ் பண்ட் நிறுவனத்தில் வேலைபார்த்து வருகிறார். இவரும் இவரது வீட்டிற்கு அருகில் வசிக்கும் ராதாகிருஷ்ணன் என்பவரது மகள் பிரதீபா (வயது 25) என்பவரும் இரண்டு ஆண்டுகளாக காதலித்து கடந்த  2019 ல் திண்டுக்கல் மாவட்டம்,  நிலக்கோட்டை மாரியம்மன் கோவிலில் திருமணம் செய்துகொண்டு அங்குள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் தங்களது திருமணத்தை பதிவு செய்துள்ளனர். இருவரும் அஜித் குமார் வீட்டில் குடும்பம் நடத்தி வந்த நிலையில் சில மாதங்கள் கழித்து தனது தாயார் வீட்டுக்கு சென்று விட்டு வருவதாக கூறிச் சென்ற பிரதீபா மீண்டும் வரவில்லை என கூறப்படுகிறது. அஜீத்குமார் சென்று மனைவியை வீட்டிற்கு வருமாறு அழைத்தபோது வரமறுத்துள்ள பிரதீபா தனக்கு விவாகரத்து கேட்டு மணப்பாறை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

Zodiac signs that are likely to have a love marriage

இந்நிலையில் பிரதீபாவிற்கும் மணப்பாறை, சொக்கலிங்கபுரத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் திருமணம் செய்வதாக நிச்சயிக்கப்பட்டது. இன்று வெள்ளக்கல்லில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற இருந்த நிலையில் நேற்று முன்தினம் 3ம் தேதி அஜீத்குமார் மணப்பாறை காவல்நிலையத்தில் தனது மனைவிக்கு அவரது தாயார் தனம் தூண்டுதலின் பேரில் வேறொருவருடன் திருமணம் நடைபெற உள்ளதாக புகார் தெரிவித்துள்ளார். ஆனால் போலீசார் நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு நிலுவையில் இருப்பதால் பிரதீபா திருமணம் செய்து கொள்வது உண்மை என தெரியவந்தால் நீதிமன்றம் மூலம் உரிய நிவாரணம் தேடிக்கொள்வேன் தற்போது எனது மனுவின் மீது விசாரணை தேவையில்லை என அஜீத்குமார் கூறுவது போல் அவரிடம் எழுதிவாங்கிக்கொண்டு அனுப்பிவிட்டனர். பின்னர் தனது நிலைகுறித்து நேற்று காலை திருச்சி மாவட்ட ஆட்சியருக்கு வாட்ஸ்அப் மூலமாக புகார் அனுப்பியுள்ளார். கலெக்டர் உத்தரவின் பேரில் இன்று திருமணம் நடக்க இருந்த மணடபத்திற்கு போலீசார் சென்றபோது திருமண ஏற்பாடுகள் நடைபெற்று உள்ளது. மணப்பாறை போலீசார் திருமணத்தை தடுக்க முற்பட்டபோது அங்கிருந்த உறவினர்கள் போலீசாரையும் மீறி அவர்கள் கண்முன்னரே  திருமணத்தை நடத்தி முடித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் போலீசார் காவல்நிலையத்திற்கு திரும்பி வந்து விட்டனர்.

ஆனால் மணப்பாறை சட்டம் ஒழுங்கு போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்து இருந்தனர். நீண்ட நேரத்திற்கு பின்னர் அஜீத்குமாரின் புகாரை மணப்பாறை அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு அனுப்பிவைத்தனர். காலை முதல் இரவு வரை இரு காவல்நிலையங்களிலும் காத்திருந்தார். பின்னர் இரவு 8 மணியளவில் அஜீத்குமாரிடம் பிரதீபாவிற்கு இன்று இரண்டாவது திருமணமான புகைப்படத்தை எடுத்துக்கொண்டு நாளை காலை மகளிர் காவல்நிலையத்திற்கு வருமாறு மகளிர் போலீசார் கூறிய அனுப்பிவைத்துள்ளனர். இரண்டு நாட்களாக காவல்நிலையத்திற்கும் வீட்டிற்குமாக அலைந்து வரும் அஜீத்குமார் இன்றும் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்காத நிலையில் ஏமாற்றத்துடன் வீட்டிற்கு புறப்பட்டு சென்றார்.