கிணற்றில் குதித்து மனைவி தற்கொலை; காப்பாற்ற சென்ற கணவனும் பலி

 
Suicide

வேடசந்தூர் அருகே குடும்ப தகராறில் கிணற்றில் குதித்து மனைவி தற்கொலை செய்துகொண்டார். அவரை காப்பாற்ற முயன்ற கணவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தார்

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுக்கா வடமதுரை அருகே உள்ள மோளப்பாடியூரை சேர்ந்தவர் முத்துவேல்(வயது 37).  விவசாயி. இவருக்கு தனலட்சுமி(35) என்ற மனைவியும், மகேஸ்வரி(15), அக்கம்மாள்(13) என்ற மகள்களும் முனீஸ்வரன்(9) என்ற மகனும் உள்ளனர். இவர்கள் மூவரும் வடமதுரையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் முறையே 10, 8, 4-ஆம் வகுப்பு படித்து வருகின்றனர். கணவன் மனைவி இருவரும் அவர்களுக்கு சொந்தமான தோட்டத்தில் விவசாயம் செய்து வந்தனர். 

இந்நிலையில் முத்துவேலுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனை தலைட்சுமி கண்டித்ததால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று மாலை அவர்களது வீட்டில் இருந்தபோது கணவன் மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் விரக்தியடைந்த தனலட்சுமி கணவருடன் கோபித்துக் கொண்டு, அங்கிருந்து ஒடிச் சென்று அவர்களது விவசாய கிணற்றில் குதித்தார். இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த முத்துவேல் தனலட்சுமியை காப்பாற்றுவதற்காக அவரும் கிணற்றில் குதித்துள்ளார். ஆனால் கிணற்றில் தண்ணீர் அதிகமாக இருந்ததால் கணவன் மனைவி இருவரும் பரிதாபமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர். 

அப்போது வீட்டில் இருந்த அவர்களது மகள் அக்கம்மாள் இதுகுறித்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு தகவல் தெரிவித்தார். அதனை தொடர்ந்து வடமதுரை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வேடசந்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ், வடமதுரை இன்ஸ்பெக்டர் தெய்வம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்ற விசாரணை நடத்தினர். 70 அடி ஆழமுள்ள கிணற்றில் 40 அடிக்கும் மேலாக தண்ணீர் இருந்ததால் திண்டுக்கல் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. திண்டுக்கல் தீயணைப்புத் துறை நிலைய அலுவலர் மயில்ராஜ் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று சுமார் ஒரு மணி நேரம் போராடி கணவன் மனைவி இருவரின் உடலையும் கிணற்றில் இருந்து மீட்டனர். 

பின்னர் போலீசார் இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனை செய்ய திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கிணற்றில் குதித்த மனைவியைக் காப்பாற்றச் சென்ற கணவனும் நீரில் மூழ்கி பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இறந்த கணவன் மனைவியின் உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதது பார்ப்பவர்களை கண்கலங்க செய்தது.