தடை செய்யப்பட்ட ஃப்ரீ பயர் விளையாட்டு எப்படி ஆன்லைனில் கிடைக்கிறது?? - அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி..

 
தடை செய்யப்பட்ட ஃப்ரீ பயர் விளையாட்டு எப்படி ஆன்லைனில் கிடைக்கிறது?? - அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி..


தடை செய்யப்பட்டுவிட்ட  ஃபிரீ ஃபயர் விளையாட்டை இளம் தலைமுறையினருக்கு ஆன்லைனில் எப்படி கிடைக்கிறது?  என மத்திய  அரசுக்கு  உயர்நீதிமன்ற மதுரைக்கிளை  கேள்வி எழுப்பியுள்ளது.

நாகர்கோவிலை சேர்ந்த அமுதா என்பவர்  உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஆட்கொணர்வு மனு ஒன்றை  தாக்கல் செய்திருந்தார்.  அதில், “தனது மகள் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் இளநிலை முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 6ம் தேதி முதல் தனது மகளை காணவில்லை. தனது மகள் ஆன்லைன் விளையாட்டுகளான பப்ஜி மற்றும் ஃபிரீ ஃபயர் போன்ற விளையாட்டுகளை அதிக ஆர்வத்துடன் விளையாடி வருவாள்.  அந்த விளையாட்டுடன் சில ஆண் நண்பர்களுடன் பழகி, அந்த நண்பர்கள் தான் தனது மகளை கடத்தி இருக்க வேண்டும். எனவே தனது மகளை மீட்டுத்தர காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும்” என்று  குறிப்பிட்டிருந்தார்.  

ஃப்ரீ பயர் கேம்

இந்த மனு  இன்று உயர்நீதிமன்ற  கிளை நீதிபதி மகாதேவன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, பப்ஜி, ஃபிரீ ஃபயர் போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட ஆன்லைன் விளையாட்டு செயலிகளுக்கு , இந்தியாவில்  தடை விதிக்கப்பட்டு ஓராண்டுக்கும் மேல்  ஆகிறது.  இருந்தபோதிலும்  மாணவ மாணவிகள்,  இளைஞர்கள் இந்த விளையாட்டுகளை  தொடர்ந்து விளையாடி வருகின்றனர் என்றும், ஆன்லைன் விளையாட்டுகளால் இளைய சமுதாயம் வீணாவதை ஏற்கமுடியாது என்றும்  நீதிபதி தெரிவித்தார்.

ஃப்ரீ பயர் கேம்

மேலும்,  தடை செய்யப்பட்ட ஃபிரீ ஃபயர் விளையாட்டுகள்  ஆன்லைனில் எவ்வாறு கிடைக்கிறது? என்று கேள்வி எழுப்பிய நீதிபதி, தடை செய்யப்பட்ட விளையாட்டுகள் மீண்டும் ஆன்லைனில் கிடைக்காமல் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.  அத்துடன்  இதுபோன்ற விளையாட்டுக்கள் பயன்பாட்டைத் தடுக்க சைபர் குற்றப்பிரிவு போலீஸ் என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள் என்றும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.   ஆன்லைன் விளையாட்டுகளுக்கான தடையை  முழுமையாக அமல்படுத்துவது குறித்து விரிவாக உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று  கூறிய அவர்,  வழக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.