போக்குவரத்து அபராத உயர்வு குறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

 
 traffic police

போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதத்தை அதிகரித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்யக் கோரி வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Madras High Court in Chennai - Chennai Madras High Court, Places to Visit  in Chennai

தமிழகத்தில் போக்குவரத்து விதிமுறைகளுக்கு விதிக்கப்படும் அபராதத்தை அதிகரித்து,  அரசு, அக்டோபர் 19ஆம் தேதி அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணை ரத்து செய்யக் கோரியும், அதற்கு தடை விதிக்க கோரியும் மதுரையைச் சேர்ந்த ஜலாலுதீன் என்பவர் பொது நல வழக்கை தாக்கல் செய்துள்ளார். போக்குவரத்து விதிமுறைகளுக்கு விதிக்கப்படும் அபராதத்தை பல மடங்கு அதிகரித்ததன் மூலம், தினக்கூலிகள், ஆட்டோ டிரைவர்கள், பிற பயணிகள் கடுமையாக பாதிக்கபடுவார்கள் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாலைகளின் நிலைமை, போக்குவரத்து நெரிசல், இயந்திர கோளாறு, கவனக்குறைவுடன் வாகனம் இயக்குவது, குடிபோதையில் வாகனம் இயக்குவது ஆகியவை சாலை விபத்துகளுக்கு முக்கிய காரணிகளாக இருப்பதாக சுட்டிக்காட்டிய மனுதாரர், அபராத தொகை அதிகரித்துள்ளதன் மூலமாக அதை அமல்படுத்துவதற்கு காவல்துறையினர், அப்பாவி மக்களை துன்புறுத்துவர் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அபராத தொகையை உயர்த்தும் முன் பொதுமக்களுக்கு அரசு முறையான சாலையை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என  மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரதசக்ரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, வழக்கு குறித்து மூன்று வாரங்களில் தமிழக அரசும், போக்குவரத்து துறை ஆணையரும் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.