பிளஸ் 2 துணைத்தேர்வுக்கான ஹால்டிக்கெட் இன்று முதல் விநியோகம்!!

 
dpi

தமிழகத்தில் கடந்த மே மாதம் நடந்து முடிந்த நிலையில் 12ஆம் வகுப்பு  மற்றும்  பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது. 12ஆம் வகுப்பில் 93.76 சதவீதம் பேரும்,  10ஆம் வகுப்பில் 90.7 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். மொத்தம் 9,12,620 பேர் தேர்வு எழுதிய நிலையில் 8,21,994 பேர் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

school

அதேசமயம்  10ஆம் வகுப்பு தேர்வை 42,519 மாணவர்களும்,  12ஆம் வகுப்பு தேர்வை 31,034 மாணவர்களும் எழுதவில்லை என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது. மொத்தமாக 73,553 மாணவ-மாணவிகள் பொதுத்தேர்வை எழுதவில்லை. அத்துடன்  10ஆம் வகுப்பு தேர்வில் 90,626 மாணவர்களும்,  12ஆம் வகுப்பு தேர்வில் 50,279 மாணவர்களும் தேர்ச்சி பெறவில்லை. இதனால் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களும், பங்கேற்காத மாணவர்களும் துணைத்தேர்வு எழுதலாம் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது.

school

அத்துடன் 12ஆம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்கும், பங்கேற்காத மாணவர்களுக்கும்  ஜூலை 25ம் தேதியும் , 10ஆம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்கு ஆகஸ்ட் 2ம் தேதியும் துணைத் தேர்வுகள் நடைபெறவுள்ளது.  இந்நிலையில் பிளஸ் 2 துணைத்தேர்வுக்கான ஹால்டிக்கெட் இன்று முதல் விநியோகிக்கப்படுகிறது. தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள்   www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் ஹால்டிக்கெட்டை  பதிவிறக்கம் செய்யலாம். செய்முறை தேர்வுக்கான தேதி விபரத்தை, தனித் தேர்வர்கள், தமக்கு ஒதுக்கப்பட்டுள்ள தேர்வு மையத்தின் முதன்மை கண்காணிப்பாளரை அணுகி, அறிந்து கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.