”தலப்பாக்கட்டி” என்ற வார்த்தையை பயன்படுத்த கூடாது - பிரபல உணவகத்திற்கு உத்தரவு

 
thalappakatti

தலப்பாக்கட்டி என்ற வார்த்தையை பயன்படுத்த கூடாது என திருவனந்தபுரத்தை சேர்ந்த பிரபல பிரியாணி உணவகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

திண்டுக்கல்லை பூர்விகமாக கொண்ட தலப்பாக்கட்டி பியாணி உலகம் முழுவதும் புகழ்பெற்ற ஒரு உணவகம் ஆகும். நாகசாமி நாயுடு என்பவர் திண்டுக்கல் மாவட்டத்தில் 1957ம் ஆண்டு ஆனந்த விலாஸ் என்ற பெயரில் ஒரு உணவகத்தை தொடங்கினார். இங்கு விற்பனை செய்யப்படும் பிர்யாணி வாடிக்கையாளர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில்,  2013ம் ஆண்டு இந்த உணவகத்தின் பெயர் திண்டுக்கல் தலப்பாக்கட்டி பிரியாணி  மாற்றம் செய்யப்பட்டது. இந்த உணவகத்திற்கு தமிழகம், இந்தியா மட்டுமின்றி உலக அளவிலும் பல கிளைகள் உள்ளன. சென்னையில் மட்டும் 28 இடங்களிலும், இந்தியா முழுவதும் 12க்கும் மேற்பட்ட இடங்களிலும் கிளைகள் உள்ளன. இதேபோல் ஐக்கிய அரபு அமீரகம், அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் தலா ஒரு கிளைகள் உள்ளன. 

thalapakatti

இந்த நிலையில், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த உம்மாச்சி தரவாடு பிரியாணி என்ற உணவுகம் தனது பெயரில் தலப்பாக்கட்டி என்ற வார்த்தையை இணைத்துக்கொண்டதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தலப்பாக்கட்டி பிரியாணி உணவகத்தின் நிர்வாகம் சார்பில்,  உம்மாச்சி தரவாடு பிரியாணி நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இருப்பினும் அந்த உணவகம் தலப்பாக்கட்டி என்ற வார்த்தையை தொடர்ந்து பயன்படுத்தி வந்துள்ளது. இதனையடுத்து திண்டுக்கல் தலப்பாக்கட்டி உணவக நிர்வாகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. பதிவு பெற்ற பெயரை பயன்படுத்துவது பதிப்புரிமை மீறல் என்பதால் உம்மாச்சி தரவாடு பிரியாணி உணவகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், திருவனந்தபுரத்தை சேர்ந்த உம்மாச்சி தரவாடு பிரியாணி உணவகம், தலப்பாக்கட்டி என்ற வார்த்தையை நீக வேண்டும் என உத்தரவிட்டனர். இதேபோல், தடை தொடர்பான நோட்டீசுக்கு ஆகஸ்ட் 5ஆம் தேதி பதில் அளிக்கவும் திருவனந்தபுரம் உம்மச்சி தரவாடு உணவகத்திற்கு உத்தரவிட்டனர்.