ஆளுநரை விமர்சிப்பதை நிறுத்திக் கொண்டால் திமுக அரசு தப்பும்....இல்லையென்றால்? - எச்.ராஜா எச்சரிக்கை

 
h

திமுகவினர் ஆளுநரை விமர்சிப்பதை நிறுத்திக் கொண்டால் அவர்களது அரசை காப்பாற்றிக் கொள்ளலாம் என பாஜக முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியுள்ளார். 

பா.ஜ.க. முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் சட்டசபையில் ஆளுநர் நடந்துகொண்டது குறித்தும், திமுகவின் செயல்பாடுகள் குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்து பேசிய எச்.ராஜா, கூறியதாவது: ஆளுநருக்கு திமுக அரசு அனுப்பிய உரையில் தமிழ்நாடு அமைதி பூங்காவாக திகழ்கிறது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் தமிழகத்தில் கஞ்சா அதிகமாக பிடிப்படுகிறது. கோவையில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க. பிரமுகர்களின் 18 பேர் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இப்படி பல சம்பவங்கள் நடந்து தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. தமிழகம் அந்நிய முதலீட்டை அதிகமாக ஈர்த்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் கர்நாடகத்தில் கடந்த ஆண்டு 18 பில்லியன் டாலரும், மகாராஷ்டிராவில் 11.6 பில்லியன் டாலரும் அந்நிய முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்திற்கு 2.5 பில்லியன் டாலர் மட்டுமே அந்நிய முதலீடு வந்துள்ளது. இவ்வாறாக உண்மைக்கு புறம்பான தகவல்களை ஆளுநர் உரையில் கூறிவிட்டு படிக்கச் சொன்னால் ஆளுநர் எப்படி படிப்பார். 

தொடர்ந்து ஆளுநரை கண்டித்து வருகின்றனர். ஆனால் தற்போது ஆளுநரை கண்டித்து பேசக்கூடாது என்று அவர் கூறியுள்ளார். நிலைமையை புரிந்ததனால் முதல்வர் அவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்து ஆளுநரை எதிர்த்தால் பின் விளைவுகளை சந்திக்க நேரிடும். திமுகவினர் ஆளுநரை விமர்சிப்பதை நிறுத்திக் கொண்டால் அவர்களது அரசை காப்பாற்றிக் கொள்ளலாம். திருமாவளவன் நடத்திய பேரணிக்கு மட்டும் தமிழக அரசு அனுமதி கொடுத்தது. ஆனால் ஆர்எஸ்எஸ் நடத்தும் பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டது.  இவ்வாறு கூறினார்.