ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீர் : ஓகேனக்கல் அருவியில் குளிக்க 2வது நாளாக தடை..

 
ஒகேனக்கல்

ஒகேனக்கல் அருவிகளில் குளிக்கவும், ஆற்றில் பரிசல் இயக்கவும் 2வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும்ஜ்  ஆற்றின் குறுக்கே கால்நடைகளை அழைத்துச் செல்லக்கூடாது எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.  

தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலமான ஒகேனக்கல்லுக்கு நாள்தோறும்  ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிவர்.   கர்நாடகம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்பட  தமிழகத்தின்  பல்வேறு மாவட்டங்களில் இருந்தும்  வந்து செல்வர்.  அருவிகளில் குளித்தும்,  பரிசலில் சென்றும் மகிழ்வர்.  இந்நிலையில் தற்போது  கர்நாடக மாநிலத்தில்  பெய்து வரும் தொடர் கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

ஒகேனக்கல் ஆறு

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் தொடர்மழை காரணமாக கிருஷ்ணராஜசாகர் மற்றும்  கபினி அணைகள் நிரம்பும் தருவாயில் உள்ளன.  இதனால் இந்த இரண்டு அணைகளில் இருந்தும் வினாடிக்கு 21 ஆயிரத்து 600 கன அடி அளவுக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது . அதிலும் கபினி அணையில் இருந்து மட்டும் வினாடிக்கு 10,000 கன அடிக்கும் மேல்  நீர் திறக்கப்படுகிறது.   இதனால் தமிழகத்தில் ஒகேனக்கலில் தண்ணீர் வரத்து அதிகரித்திருக்கிறது.  நீர்வரத்து வினாடிக்கு  5,000 கனஅடியாக இருந்த நிலையில்,  தற்போது 7,000 கண்ணாடி வீதம் அதிகரித்து இருக்கிறது.  இதனால் ஒகேனக்கல் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.  

ஒகேனக்கல்

இதன் காரணமாக  காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  மேலும்   ஒகேனக்கல் அருவிக்கு நீர்வரத்து அதிகரிப்பால் சுற்றுலா பயணிகள் குளிக்க, பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் நேற்று  தடை விதித்தது.   தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வண்ணமே இருப்பதால் இன்று 2வது நாளாக பொதுமக்கள் ஒகேனக்கல் அருவிகளில் குளிக்கவும்,  பரிசல்  இயக்கவும் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆற்றின் குறுக்கே கால்நடைகளை ஓட்டிச்செல்லக் கூடாது என்றும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.