‘வாழ்க்கை பாடத்தை கற்றுத்தரும் வழிகாட்டிகள்’ - வைகோ ஆசிரியர் தின வாழ்த்து..

 
வைகோ

நாளை செப்.5 ஆசிரியர் தினம் கொண்டாடப்பட உள்ளதை ஒட்டி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வாழ்த்து தெரிவித்துள்ளார்.  

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “
"குலன் அருள் தெய்வம் கொள்கை மேன்மை
கலைபயில் தெளிவு கட்டுரை வன்மை
நிலம்மலை நிறைகோல் மலர்நிகர் மாட்சியும்
உலகியல் அறிவோடு உயர்குண மினையவும்
அமைபவன் நூலுரை ஆசிரியன்னே"
என்று நன்னூல் ஆசிரியர்க்கு இலக்கணம் வகுத்துள்ளது.

 ‘வாழ்க்கை பாடத்தை கற்றுத்தரும் வழிகாட்டிகள்’ - வைகோ ஆசிரியர் தின வாழ்த்து..

நிலம், மலை, நிறைகோல், மலர் போன்றவை உணர்த்தும் பொறுமை, உயர்வு, நடுவுநிலைமை, அனைவராலும் மதிக்கக்கூடிய பண்பு ஆகியவை கைக்கூடியவராக ஆசிரியருக்கு மேன்மை தருவனவாகும். இத்தகைய சிறப்புவாய்ந்த ஆசிரியர்களை போற்றும் வகையில் ,ஆசிரியர் நாள் கொண்டாடப்படுகிறது. ஒரு நல்ல ஆசிரியராக தமது இறுதி காலம் வரை வாழ்ந்துக் காட்டி, மாபெரும் தத்துவமேதையாக விளங்கிய இந்திய குடியரசு முன்னாள் தலைவர்,  டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 05 ஆம் நாளை ஒவ்வொரு வருடமும் ஆசிரியர் திருநாளாக இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
ஒழுக்கம், பண்பு, ஆற்றல், ஊக்கம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி, வாழ்க்கை, பொது அறிவு என அனைத்தையும் மாணவர்களுக்கு சிறந்த முறையில் கற்பித்து, ஒரு உண்மையான வழிகாட்டியாக விளங்குபவர்கள் ஆசிரியர்கள்.

 ‘வாழ்க்கை பாடத்தை கற்றுத்தரும் வழிகாட்டிகள்’ - வைகோ ஆசிரியர் தின வாழ்த்து..

 அப்படிபட்ட ஆசிரியர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில், செப்டம்பர் 05 நாளை ‘ஆசிரியர் தினமாக’ கொண்டாடுகிறோம்.  வாழ்க்கை என்ற பாடத்தைக் கற்றுத்தந்து, மாணவர்களுக்கு உண்மையான வழிகாட்டியாக விளங்கி, ஒவ்வொரு மாணவர்களையும், சிறந்த மனிதர்களாக்குவது ஆசிரியர்கள் தான்.   மாணவர்களை  பட்டைத்  தீட்டி வைரமாக ஒளிர செய்ய ஒரு சிறந்த ஆசிரியரால் தான் முடியும். அத்தகைய ஆசிரியர் சமுதாயத்திற்கு இதயமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.