ஆளுநர் உரையை செல்போனில் வீடியோ பதிவு செய்த ஆளுநரின் விருந்தினர் மீது உரிமை மீறல் தீர்மானம்

 
rn ravi

சட்டப்பேரவையில் ஆளுநர் உரையின் போது,செல்போன் மூலம் வீடியோ பதிவு செய்த ஆளுநரின் விருத்தினர் குறித்து, ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க அவை உரிமை மீறல் குழுவிற்கு சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டுள்ளார்.

T R B Rajaa - Bharatpedia

சட்டப்பேரவையில், ஆளுநர் உரையின் போது,பேரவை நடவடிக்கைகளை செல்போன் மூலம் வீடியோ பதிவு செய்தவர் மீது திமுக சட்டமன்ற உறுப்பினர் டிஆர்பி ராஜா அவை உரிமை மீறல் கொண்டு வந்து உரையாற்றினார். அப்போது பேசிய அவர், கடந்த 9ம் தேதி  ஆளுநர் பேரவையில் உரையாற்றும்போதும், உரையாற்றி முடிந்த பின்னரும் நடைபெற்ற நிகழ்வுகள் அனைத்தும்  அவை உறுப்பினர்கள் அனைவரும் அறிந்ததே என்றும், எனினும் தங்களால் அனுமதிக்கப்பட்ட புகைப்பட கலைஞர்கள், ஒளிப்பதிவாளவர்கள் மட்டுமே பேரவை நிகழ்வுகளை பதிவு செய்ய முடியும் எனவும் கூறினார்.

மேலும், சட்டமன்றப் பேரவை விதி 87 (x)-ன்கீழ், சட்டமன்ற உறுப்பினர்கள் கைபேசியை பேரவைக்குள் கொண்டு வரக்கூடாது, பேரவை உறுப்பினர்களே கொண்டு வரக் கூடாது எனும் போது, பார்வையாளர்கள். அந்நியர்கள் எப்படி கைபேசியை பேரவைக்குள் எடுத்துவர அனுமதிக்கபட்டார்கள்? என கேள்வி எழுப்பிய அவர், பேரவை நடவடிக்கைகளை யாரும் ஒளிப்பதிவு செய்திடல் கூடாது எனவும் கூறினார்.

இந்நிலையில் ஆளுநர் உரையின் போது ஆளுநரின்  விருந்தினர் ஒருவர் மாடத்திலே அமர்ந்திருந்த நிலையில், பேரவை நடவடிக்கைகளை தன்னுடைய கைபேசி மூலம் பதிவு செய்து கொண்டிருந்தார் என சுட்டிகாட்டிய அவர், அப்போதே அதுகுறித்து சபாநாயகர் கவனத்திற்கு கொண்டு வந்ததோடு, பேரவை சார்ஜெண்ட்டிடன் நேரடியாகவும் இதை தெரிவித்ததாகவும் குறிப்பிட்டார்.

பேரவை விதிகளுக்கு மாறாக, பேரவை நடவடிக்கைகளை ஒளிப்பதிவு செய்த அந்த நபர் செயலை அவை உரிமை மீறிய செயலாக கருதி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி ராஜா வலியுறுத்தினார்.

இதற்கு பதிலளித்து பேசிய சபாநாயகர் அப்பாவு, இந்த பிரச்சனையில் அவை உரிமை மீறல் இருப்பதாக கருதுவதால், ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க அவை உரிமை மீறல் குழுவிற்கு உத்தரவிட்டார்.