சர்ச்சை நாயகனாக உருவெடுக்கும் ஆளுநர்.. - டிடிவி தினகரன் விமர்சனம்..

 
TTV

தமிழக ஆளுநர் தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி,  சர்ச்சை நாயகனாக திகழ்வதாகவும் அவருடைய  பேச்சுக்கு யாரும் முக்கியத்துவம் அளிக்கக் கூடாது என்றும்   அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.  

சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தலைமை அலுவலகத்தில்,  ராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகிகளோடு கட்சி வளர்ச்சி பணிகள் தொடர்பாக டிடிவி தினகரன் ஆலோசனை  நடத்தினார்.  அதன் பின்னர்  செய்தியாளர்களை சந்தித்த அவர்,  திமுக ஆட்சிக்கு வந்த பிறகு செவிலியர்கள்,  அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைவரும் ஏமாற்றபட்டிருப்பதாக குற்றம் சாட்டினார்.  தமிழ்நாடு விவகாரத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி,  சர்ச்சை நாயகனாக உருவெடுத்து இருப்பதாகவும், அவருடைய பேச்சு ஆளுநர் பதவிக்கு அழகு அல்ல என்றும் அவர் கூறினார்.

 ஆளுநர் ஆர்.என் ரவி

 பொதுவெளியில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து,  கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் பேசியது தவறு என அவரே உணரும் காலம் விரைவில் வரும் என்று கூறிய அவர்,  புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற தீண்டாமை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் காவல்துறை கைது செய்ய வேண்டும் என்று  வலியுறுத்தினார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்ட பின்னர்,  அங்கு போட்டியிடுவது குறித்து முடிவு செய்யப்படும் என்றும்  டிடிவி தினகரன் தெரிவித்தார்