சட்டமன்றத்தில் உரையாற்ற ஆளுநர் ரவி தகுதியானவர் அல்ல.. - திருமாவளவன் சாடல்..

 
திருமா

சட்டமன்றத்தில் உரையாற்ற தகுதியற்றவர் ஆளுநர் ஆர்.என்.ரவி என  விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.  

தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த  அவர், ஆளுநர் ஆர்எஸ்எஸ் தொண்டரைப் போன்று செயல்பட்டு வருவதாகவும்,  அவர் பதவியை ராஜினாமா செய்து விட்டு ஆர்எஸ்எஸ் பணிகளை மேற்கொள்ளலாம் என்றும் கூறினார். ஆளுநர் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக செயல்படுகிறார் என்றும்,  இது அரசியல் அமைப்பு சட்டத்தை அவமதிக்கும் செயலாகும் என சாடினார். மேலும் தமிழக ஆளுநர் தொடர்ந்து குதர்க்கமான கருத்துக்களை பேசி வருகிறார்; தமிழகம் என்றாலும் தமிழ்நாடு என்றாலும் ஒன்றுதான் என்று கூறினார்.

  ஆளுநர் ஆர்.என் ரவி

மேலும் அவர் திமுக அரசின் கொள்கைக்கு எதிரானவர், திராவிட கோட்பாட்டிற்கு எதிரானவர்;  தமிழகத்தில் ஆளுநராக நீடிப்பதற்கு ஆளுநர் ஆர்.எம்.ரவிக்கு  தகுதி இல்லை என கூறிய திருமா,  இப்படிபட்ட ஒருவர் சட்டப்பேரவையில் நாளை  உரையாற்றுவது எந்த வகையில் பொருத்தம் என்று கேள்வி எழுப்பினார். திராவிட மாடல் அரசின் கொள்கையை முன்னிறுத்தக்கூடிய உரையை ஆற்றுவதற்கு அவர்,  எந்த வகையிலும் தகுதி படைத்தவர் அல்ல என்றும் தெரிவித்தார்.  

மேலும் புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் கிராமத்தில் மனித மலம் கலந்த அநாகரீகத்தை செய்தவர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என்றும், முதல்வர் இதில் நேரடியாக தலையிட வேண்டும் என்றும் தெரிவித்தார்.  இந்த அநாகரீகமான செயலில் ஈடுபட்டவர்களை   கைது செய்யக்கோரி வருகிற ஜனவரி 11ஆம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்  நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்.