அரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வை உடனே வழங்கிட வேண்டும் - சசிகலா வலியுறுத்தல்!!

 
sasi

அரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வை உடனே வழங்கிட வேண்டும் என்று சசிகலா வலியுறுத்தியுள்ளார். 

மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையாக தமிழக அரசு மருத்துவர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் என்று அரசு மருத்துவர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.  இந்த கோரிக்கையானது தமிழக அரசால் ஏற்றுக் கொள்ளப்படும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில்,  மருத்துவத் துறை மானிய கோரிக்கையில் இதுகுறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. 

doctor

மருத்துவர்களின் கோரிக்கையை ஆய்வு செய்து நிறைவேற்ற உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை ஆணையிட்ட நிலையில் , தமிழக அரசு அமைத்த குழுவும்  அரசு மருத்துவர்களின் கோரிக்கையை நிறைவேற்றலாம் என பரிந்துரைத்தது.  ஆனாலும் இதுவரை அரசு மக்களின் கோரிக்கை நிறைவேற்றப்படாமல் உள்ளது. எனவே அரசு மருத்துவர்களின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தமிழக அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

tn

இந்நிலையில் சசிகலா தனது ட்விட்டர் பக்கத்தில், "தமிழக அரசு மருத்துவர்கள், தங்களுக்கு ஊதிய உயர்வு அளித்திட வேண்டும் என்று தொடர்ந்து போராடி வருகின்றனர். அவர்களின் நியாயமான கோரிக்கையை உடனே நிறைவேற்றிட தமிழக அரசு முன் வர வேண்டும். கடந்த 2019ஆம் ஆண்டே மருத்துவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்த திமுகவினர், இன்றைக்கு தங்களுடைய ஆட்சியில் நிறைவேற்ற தயங்குவது ஏன்? கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா என்ற கொடிய நோயிலிருந்து தமிழகம் மீள்வதற்கு மருத்துவர்களின் பங்கு மிகவும் இன்றியமையாதது. இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு, அரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வை உடனே வழங்கிட வேண்டும் என்று தமிழக அரசை மீண்டும் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன் " என்று பதிவிட்டுள்ளார்.