காதலன் கண்முன்னே இளம்பெண்ணை கூட்டு வன்கொடுமை செய்த 3 பேர் மீது குண்டாஸ்

 
man

கடலூரில் இளம் பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த 3 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. நெல்லிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் 21 வயதுடைய இளம் பெண், கடலூர் மஞ்சக்குப்பத்தில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வருகிறார். கடந்த மாதம் 28ம் தேதி இரவு வேலை முடிந்து அந்த இளம்பெண் தனது காதலனுடன் மோட்டார் சைக்கிளில் கம்மியம்பேட்டை பகுதிக்கு சென்றார். அங்கு கட்டி முடிக்கப்படாத பழைய கட்டடத்தில் இருவரும் தனியாக பேசிக் கொண்டிருந்தனர். 

அப்போது அங்கு வந்த குப்பன்குளத்தை  சேர்ந்த கிஷோர்(19) சதீஷ்(18) ஆரிப் (19) ஆகியோர் காதலர்கள் இருவரையும் செல்போனில் வீடியோ எடுத்து வைத்துக் கொண்டு மிரட்டி இளம்பெண்ணின் காதலன் வைத்திருந்த செல்போன் மற்றும் பணத்தையும் பறித்தனர். மேலும் அந்த இளம்பெண்ணை காதலன் கண்முன்னே கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து புகாரின் பேரில் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் வழக்குப்பதிவு செய்து மூன்று பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் இவர்கள் குற்றச்செயலை கட்டுப்படுத்தும் பொருட்டு அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் கிஷோர், சதீஷ், ஆரிப் ஆகிய மூவரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் உத்தரவிட்டார்.