தமிழகம் முழுவதும் ஆவின் நெய் தட்டுப்பாடு.. அதிகாரிகள் மீது முதல்வர் சாட்டையை சுழற்ற வலியுறுத்தல்..

 
ponnusamy

ஆவின் அதிகாரிகள் பணம் சம்பாதிப்பதிலேயே குறியாக இருப்பதாக  தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் நிறுவனத் தலைவர் ஆ.பொன்னுசாமி குற்றம் சாட்டினார்.  

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக அரசின் பொதுத்துறை கூட்டுறவு நிறுவனமான ஆவினில் பால் மட்டுமின்றி பால் சார்ந்த வெண்ணெய், நெய், பால்கோவா உள்ளிட்ட பல்வேறு வகையான பால் சார்ந்த உபபொருட்கள் உற்பத்தி செய்து பால் முகவர்கள் மூலம் தமிழ்நாடு முழுவதும் சந்தைப்படுத்தப்பட்டு, பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படுகின்றன.

ghee

கடந்த தீபாவளி, ரம்ஜான், கிறிஸ்துமஸ் உள்ளிட்ட பண்டிகைகளுக்கு ஆவின் நெய் அதிகளவில் தேவைப்பட்ட நிலையில், தமிழ்நாடு முழுவதும் சிறு, சிறு பாலகங்கள் வைத்து நடத்தும் பால் முகவர்களுக்கு போதிய அளவு ஆவின் நெய் வழங்கப்படவில்லை. காரணம் நெய் உற்பத்திக்கு தேவையான வெண்ணெய் கையிருப்பு இல்லாமல் போனதும், உற்பத்தி செய்யப்படும் சொற்ப அளவிலான நெய்யும் ரிலையன்ஸ் போன்ற பெருநிறுவனங்களுக்கும், இணையதள செயலி மூலம் வணிகம் செய்யும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும், மொத்த விநியோகஸ்தர்களுக்கும் வாரிக் கொடுத்து அதிகாரிகள் ஆதாயம் பார்த்த காரணத்தால் தான்.

அதுமட்டுமின்றி தமிழ்நாட்டில் கடந்த ஆட்சியில் நாளொன்றுக்கு சுமார் 40லட்சம் லிட்டர் வரை இருந்த பால் கொள்முதலானது. தற்போதைய திமுக ஆட்சியில் அது, 30லட்சம் லிட்டராக குறைந்து போனது.  ஆவின் நிறுவனத்தின் பால் கொள்முதல் கடுமையாக குறைந்து போனதன் காரணமாக நெய்க்கு மூலப்பொருளான வெண்ணெய்க்கும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு, அதனால் நெய் உற்பத்தியும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

aavin

மேலும், ஆவினில் தற்போது நிலவும் வெண்ணெய் தட்டுப்பாட்டை சரி செய்ய ஆவின் நிர்வாகம் தங்களது தேவைக்கு வெளிமாநிலங்களில் இருந்து வெண்ணெய் கொள்முதல் செய்வதால், அந்த வெண்ணையில் இருந்து உற்பத்தி செய்யப்படும் நெய்க்கான அடக்கவிலை அதிகமாக ஆகிறது. இங்கு கொள்முதல் செய்யப்பட்டும் நெய்யை உருக்கும்போது ஒரு கிலோ வெண்ணைக்கு 850 கிராம் நெய் கிடைப்பதாகவும், இதுவே அண்டை மாநில பால் நிறுவனங்களிடமிருந்து  பெறும் வெண்ணையை உருக்கினால்  750கிராம் நெய் மட்டுமே கிடைப்பதாக கூறப்படுகிறது.

அதன் காரணமாக ஆவினில் தற்போது நெய் உற்பத்திக்கு அதிகம் கவனம் செலுத்தப்படவில்லை என்றும், அதனால் தான் மதுரை, கோவை, வேலூர், திருச்சி, திருவண்ணாமலை, தஞ்சை, தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ஆவின் நெய்க்கு கடுமையான தட்டுபாடு நிலவுவதாக கூறப்படுகிறது.   சிறு ஆவின் பாலகங்கள் நடத்தும் பால் முகவர்களிடம்  விற்பனை ஆகாத, கேக், முறுக்கு, மிச்சர், இனிப்பு, நூடுல்ஸ் உள்ளிட்ட பொருள்களை வலுகட்டாயமாக கொள்முதல் செய்ய வற்புறுத்துவதோடு, குறைந்தபட்சம் 10 ஆயிரம் ரூபாய்க்கு குறைவாக ஆவின் பால் பொருட்கள் வாங்கும் பாலகங்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என அதிகாரிகள் பால் முகவர்களை மிரட்டுகின்றனர்.

தமிழகம் முழுவதும் ஆவின் நெய் தட்டுப்பாடு.. அதிகாரிகள் மீது முதல்வர் சாட்டையை சுழற்ற வலியுறுத்தல்.. 

இதையெல்லாம் சரி செய்ய வேண்டுமானால் தமிழ்நாடு அரசு ஆவின் மீது அக்கறை கொண்டு,  ஏற்கனவே பிரகாஷ் ஐஏஎஸ் அவர்களை பால்வள ஆணையராக தனி அதிகாரியாக நியமனம் செய்தது போன்று, வேறு ஒரு ஐஏஎஸ் அதிகாரியை பால்வள ஆணையராக நியமிக்க அரசு முன் வர வேண்டும். ஆவினில் நாளொன்றுக்கு சுமார் 29 லட்சம் லிட்டர் பால் மட்டுமே விற்பனை ஆகும் சூழலில், குறைந்தபட்சம் நாளொன்றுக்கு சுமார் 40 லட்சம் லிட்டருக்கு மேல் பால் கொள்முதல் செய்தால் மட்டுமே, கொழுப்பு சத்து செறிவூட்டப்பட்ட பால், நிலைப்படுத்தப்பட்ட பால் உற்பத்திக்கும், நெய் உற்பத்திக்கும் தேவையான வெண்ணெய் கையிருப்பு இருக்கும்.

மேலும், வரும் வாரத்தில்  பொங்கல் திருநாள், ஐயப்பன் மகரஜோதி பூஜை, முருகன் தைப்பூசத் திருவிழா என அடுத்தடுத்து பண்டிகை காலங்கள் வருவதாலும், தனியார் பால் நிறுவனங்களின் நெய்யை விட, ஆவின் நெய் மனம், சுவை, தரம் சிறப்பாக இருக்கும் என்பதால் பக்தர்களும், பொதுமக்களும் ஆவின் நெய்யை அதிகமாக விரும்பி வாங்குவார்கள் என்பதாலும், நெய் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசின் பொறுப்பாகும்.

எனவேதமிழக முதல்வர் அவர்கள் ஆவின் நிறுவனத்தின் மீது தனிக்கவனம் செலுத்தி,  பணம் சம்பாதிப்பதிலேயே குறியாக இருக்கும் பால்வளத்துறை அதிகாரிகள் மீது   சாட்டையை சுழற்ற வேண்டும். அப்போது தான் ஆவினில் பால் கொள்முதல் அதிகரித்து,  பால் மற்றும் பால் சார்ந்த உபபொருட்களின் உற்பத்தியும், விற்பனையும் பாதிக்கப்படாது ” என்று குறிப்பிட்டுள்ளார்.