ஓபிஎஸ் தலைமையில் பொதுக்குழு! இணை ஒருங்கிணைப்பாளராக கே. சி. பழனிச்சாமி நியமனம்!

 
op

அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளராக கே. சி. பழனிச்சாமி நியமனம் செய்யப்பட உள்ளார்.   இணை ஒருங்கிணைப்பாளராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி நீக்கம் செய்யப்பட்டுள்ளதால் அவருக்கு பதிலாக கே. சி. பழனிச்சாமி நியமனம் செய்யப்பட இருக்கிறார்.

kc

 அதிமுக தற்போது ஓபிஎஸ் அணி,  இபிஎஸ் அணி என்று இரண்டாக உடைந்திருக்கிறது .  இதில் இபிஎஸ் அணியில் ஒருங்கிணைப்பாளர்- இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் தூக்கி எறியப்பட்டு அதற்கு பதிலாக பொதுச்செயலாளர்,  துணைப் பொதுச் செயலாளர் என்கிற பதவிகள் கொண்டு வரப்பட்டிருக்கின்றன.  இதில் எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளர்  என்று இன்று நடந்த பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.  

 ஆனால் ஓபிஎஸ் அணியில் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் என்றும்,  இணை ஒருங்கிணைப்பாளர்   கே. சி. பழனிச்சாமி என்றும் நியமனம் செய்யப்பட இருக்கிறது. மற்றும் புதிய மாவட்ட செயலாளர்கள் நகர செயலாளர்கள் ஒன்றிய செயலாளர்கள் மற்றும் கிளைச் செயலாளர் நியமனம் நடைபெற இருக்கிறது. 

cp

 அதிமுகவின் இபிஎஸ் அணியின் சார்பில் இன்று சென்னை வானகரம் ஸ்ரீ வாரு திருமண மண்டபத்தில் பொதுக்குழு நடைபெற்றது.  அதில் கட்சியில் செயல் விதிகளுக்கு எதிராக நடந்ததாக சொல்லி ஓ. பன்னீர்செல்வம் பொருளாளர் பதவியில் இருந்து கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அவர் நீக்கப்படுகிறார் என்றும்,  அவரது ஆதரவாளர்களான ஜே. சி. டி. பிரபாகரர்,  வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோரும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்புகளில் இருந்து நீக்கம் செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  இனி இவர்களுடன் யாரும் தொடர்பு வைத்து கொள்ளக்கூடாது என்று எடப்பாடி தரப்பினருக்கு உத்தரவிடப்பட்டது.

jcd

 இதை அடுத்து ஓ.  பன்னீர்செல்வம்,  அவர்கள் என்னை நீக்குவதற்கு நான் அவர்களை நீக்குகிறேன் என்றார்.  ‘’ நான் கழக சட்டப்படி கோடிக்கணக்கான தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டேன்.  அதனால் எடப்பாடி பழனிச்சாமிக்கும்,  முனுசாமிக்கும்  என்னை நீக்குவதற்கு யாருக்குமே உரிமை இல்லை.  என்னை கட்சியில் இருந்து நீக்குவதாக தன்னிச்சையாக அறிவித்ததை அடுத்து இவர்கள் இருவரையும் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நான் நீக்குகிறேன்’’ என்றார்.  

 அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் நீக்கம் என்று பொதுக்குழு தீர்மானம் நிறைவேற்றிய நிலையில் அதிமுகவில் இருந்து எடப்பாடி பழனிச்சாமி நீக்கம் என்று ஓபிஎஸ் அறிவித்து பதிலடி கொடுத்திருந்தார்.   அத்துடன் இல்லாமல் அடுத்தகட்ட நடவடிக்கைக்கும் தயாராகிவிட்டார். ஓபிஎஸ்  தலைமையில் பொதுக்குழு கூடுகிறது என்றும்,  இதில் புதிய மாவட்டச் செயலாளர்கள், நகர செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள், மற்றும் கிளை செயலாளர்கள் நியமனம் நடைபெறுகிறது என்றும், இணை ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து எடப்பாடி கே. பழனிசாமி நீக்கப்பட்டு  கே. சி. பழனிச்சாமி  இணை ஒருங்கிணைப்பாளராக நியமனம் செய்யப்படுகிறார் என்றும் தகவல் பரவுகிறது.