அதிமுக-வின் வங்கிக் கணக்குகளை முடக்குக.. ஆர்பிஐக்கு கடிதம் எழுதிய ஓபிஎஸ்..

 
ops

அதிமுகவின் 7 வங்கிக் கணக்குகளை முடக்கக்கோரி, சென்னை மண்டல ரிசர்வ் வங்கி இயக்குநருக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.  

சென்னை அடுத்த வானகரத்தில் கடந்த 11-ம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில், எடப்பாடி பழனிசாமி அதிமுகவின்  இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.  அதே நாளில்   கட்சியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நீக்கப்பட்டதாகவும்  அறிவிக்கப்பட்டது. ஓபிஎஸ் பொருளாளர் பதவியில் இருந்து நீக்கியதோடு, அடிப்படை  உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார்.  பின்னர் அதிமுகவின் புதிய பொருளாளராக  திண்டுக்கல் ஸ்ரீனிவாசன் நியமிக்கப்படுவதாகவும்,  இபிஎஸ் அறிவித்தார்.  

admk office

இதுஒருபுறம் இருக்க , ஓ.பன்னீர் செல்வமோ ,   தான் தான் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்றும் அதிமுகவில் இருந்து தன்னை நீக்க யாருக்கும் உரிமையில்லை என்றும் தெரிவித்து வருகிறார்.  தொடர்ந்து தன் பங்குக்கு அதிமுகவில் இருந்து நீக்குவதாக உறுப்பினர்களின் பட்டியலையும் வெளியிட்டு வருகிறார்.  அந்த வகையில் தற்போது அதிமுகவின் வங்கி கணக்குகளை முடக்க வேண்டும் என  சென்னை மண்டல ஆர்பிஐ-க்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.

op

 அவர் எழுதியுள்ள கடிதத்தில்,  அதிமுகவின் புதிய பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் தேர்வு செய்யப்பட்ட முறை அதிமுகவின் சட்ட விதிகளுக்கு எதிரானது என்றும்,  கடந்த 15 ஆண்டுகளாக அதிமுகவின் பொருளாளராக தான் இருந்து வருவதாகவும்  குறிப்பிட்டுள்ளார்.   அதிமுக செயற்குழு பொதுக்குழு தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால்,  தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின் படி இன்றுவரை தான்  தான் ஒருங்கிணைப்பாளர் எனவும் ஓ.பன்னீர்செல்வம் சுட்டிக்காட்டியுள்ளார்.   ஆகையால்  அதிமுகவின் அதிகாரப்பூர்வ வங்கி கணக்குகள் உள்ள வங்கிகளின் பண பரிவர்த்தனையை நிறுத்தி வைக்குமாறும்,  இது தொடர்பாக சார்புடைய வங்கிகளுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்குமாறும் ஓபிஎஸ் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.