பாஜகவில் இணைந்தார் பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் அமரிந்தர் சிங்

 
Amarindhar singh

பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் அமரிந்தர் சிங் இன்று பாஜகவில் இணைந்தார். 

பஞ்சாபின் முன்னாள் முதலமைச்சராக இருந்த அமரிந்தர் சிங், காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக காங்கிரஸில் இருந்து விலகி பஞ்சாப் லோக் காங்கிரஸ் என்ற தனிக்கட்சியை தொடங்கினார். அவர் நடந்து முடிந்த பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தார். அவர் போட்டியிட்ட பாட்டியாலா தொகுதியில் ஆம் ஆத்மி வேட்பாளரிடம் தோல்வி அடைந்தார். அந்த தொகுதியில் ஆம் ஆத்மி வேட்பாளர் அஜித் பால் சிங் கோலி வெற்றி பெற்றார். இதேபோல் அமரிந்தர் சிங்கின் கட்சி போட்டியிட்ட பெரும்பாலான தொகுதிகளிலும் பின்னடைவையே சந்தித்தது. பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்ற ஆம் ஆத்மி கட்சி பஞ்சாபில் ஆட்சியை பிடித்தது. இதனிடையே பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் அமரிந்தர் சிங் திங்கள் கிழமை பாஜகவில் இணையவுள்ளதாகவும்,  தனது கட்சியான பஞ்சாப் லோக் காங்கிரஸ் கட்சியையும் பாஜகவுடன் இணைக்கவுள்ளதாகவும் தகவல் வெளியானது. 

இந்நிலையில், பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை நேரில் சந்தித்த பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் அமரிந்தர் சிங், அவர் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். இதேபோல் ஏற்கனவே அறிவித்தபடி தனது கட்சியான பஞ்சாப் லோக் காங்கிரஸ் கட்சியை பாஜகவுடன் இணைத்தார்.