துரோகம் செய்த ஓ.பி.எஸ். அதிமுகவிற்கு தேவையில்லை - தங்கமணி

 
thangamani

அதிமுகவிற்கு துரோகம் செய்த ஓ.பன்னீர்செல்வம் கட்சிக்கு தேவை இல்லை என முன்னாள் அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். 


அதிமுக பொது குழு கூட்டம் நடத்த ஓ. பன்னீர்செல்வம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தடை கோரி வழக்கு தாக்கல் செய்த நிலையில் பொதுக்குழு கூட்டம் நடத்துவதற்கு தடை இல்லை என்று உயர்நீதிமன்றம் இன்று காலை அதிரடி உத்தரவு பிறப்பித்தது.  இதை அடுத்து திட்டமிட்டபடி சென்னை வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட்டது. இதில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இதேபோல் பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் தேர்வு செய்யப்பட்டார். அத்துடன் பொதுக்குழு கூட்டத்தில் அதிமுக பொருளாளருக்கான அதிகாரங்களை குறைத்து பொதுச்செயலாளருக்கு கூடுதல் அதிகாரம் தரப்பட்டது.

ops

இந்நிலையில், பொதுக்குழுவில் முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசியதாவது: எங்கும் வெற்றி, எதிலும் வெற்றி என சொல்லி எம்ஜிஆர் புன்னகையோடு, ஜெயலலிதாவின் நிர்வாக திறமையோடு செயல்படுபவர் எடப்பாடி பழனிசாமி. ஏழை, எளிய மக்களின் தொண்டனாக இருப்பவர். திமுகவை எதிர்க்கும் வலிமை மிக்க தலைவர் எடப்பாடியார் தான். திமுகவை எதிர்க்கும் தமிழகத்தின் ஒரே தலைவராக எடப்பாடியார் இருப்பதால் அவருக்கு இந்த இடைக்கால பொதுச்செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. 4 மாதங்களுக்கு பிறகு பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்படுவார். பொதுக்குழுவை நடத்தவிடாமல் தடுக்க நினைத்தவர்கள் தலைமைக் கழகத்தின் பூட்டை உடைத்து உள்ளே செல்கிறார் என்றால் ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவின் உண்மையான தொண்டனா?. இந்த இயக்கத்தை அழித்துவிட வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் செயல்படுகிறார். இவ்வளவு துரோகம் செய்தவர் இனி அதிமுகவுக்கு தேவையா? எனவும் கேள்வி எழுப்பினார்.