மக்கள் கடனில் தவிக்கும் போது கடலில் பேனா எதற்கு?- செல்லூர் ராஜூ கேள்வி

 
sellur raju

சென்னை மெரினா கடற்கரையில், கருணாநிதியின் நினைவிடம் அருகே கடலில் பேனா வடிவில் சிலை அமைக்க அரசு திட்டமிட்டு வரும் நிலையில், மக்கள் கடனில் தவிக்கும் போது கடலில் பேனா எதற்கு என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கேள்வி எழுப்பியுள்ளார். 

சொத்து வரி மற்றும் மின்கட்டண உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதேபோல்
மதுரை முனிச்சாலை பகுதியில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில், அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சுமார் 500க்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்கள் கருப்பு சட்டை அணிந்து கலந்துகொண்டனர். அவர்கள் அனைவரும் திமுக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.ஆர்ப்பாட்டத்தின் போது தொடண்டர்கள் மத்தியில் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியதாவது: தமிழகத்தில் சட்ட ஒழுங்கு கேலிக்கூத்தாக உள்ளது. இந்தியாவிலேயே சட்ட ஒழுங்கு மோசமான மாநிலம் என்று சர்வே சொல்கிறது. இது வேதனையாக உள்ளது. நீட் தேர்வு ரத்து, 7 பேர் விடுதலை வாக்குறுதிகள் எல்லாம் என்ன ஆச்சு?செஸ் ஒலிம்பியாட் விளம்பரத்தில் லெஜன்ட் சரவணா போல கோட்டு, சூட்டு போட்டுக்கொண்டு நடந்து வந்து மக்களை ஏமாற்றி கொண்டிருக்கிறார் ஸ்டாலின். ஆனால், அதில் செஸ் சாம்பியன்களை காணோம். 

sellur raju

சீன அதிபர் உடனான சந்திப்பின் போது வேஷ்டி கட்டிக்கொண்டு வந்த மோடி தான் உண்மையான தமிழர். ஸ்டாலின் தன்னை தமிழர் என சொல்லி ஏமாற்றி கொண்டிருக்கிறார். கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழந்த விவகாரத்தில் பள்ளிக்கு சம்பந்தம் இல்லை என்றார் டிஜிபி. பின்னர் மறுநாள் மூன்று பேரை கைது செய்தார்கள். அதிமுக ஆட்சியில் அனிதா இறந்த போது அவ்வளவு விமர்சனம் செய்து போராடியவர்கள், இப்போது எங்கே போனார்கள்? திருமா, வைகோ, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சி தலைவர்கள் யாரையுமே காணோமே.தமிழகத்தில் திமுகவுக்கு அடுத்த நாங்கள் தான் என சிலர் சொல்லிக்கொண்டு இருந்தார்கள். அதை பொய்யாக்கும் வகையில் இந்த ஆர்பாட்டம் நடைபெற்று கொண்டிருக்கிறது. தமிழகத்தின் ஒரே எதிர்கட்சி அதிமுக தான். மக்கள் கடனில் தவிக்கும் போதும், கடலில் பேனா எதற்கு?. இவ்வாறு கூறினார். 

கருணாநிதியின் நினைவிடம் அருகே 80 கோடி ரூபாய் செலவில் பேனா வடிவில் நினைவு சிலை அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு வருகிறது. இதனை விமர்சிக்கும் வகையிலேயே முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு,  மக்கள் கடனில் தவிக்கும் போதும், கடலில் பேனா எதற்கு? என கேள்வி எழுப்பியுள்ளார்.