ஓ.பி.எஸ்-இ.பி.எஸ். இடையேயான பிரிவு அண்ணன்-தம்பி பிரிவு போன்றது - செல்லூர் ராஜு

 
 sellur raju

எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் இடையேயான பிரிவு என்பது அண்ணன், தம்பிக்கு இடையேயுள்ள பிரிவு போன்றது என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
 
மதுரை சிக்கந்தர் சாவடி, கோவில்பாப்பாகுடி பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பள்ளி கட்டிட பணிகளுக்கான பூமி பூஜை  நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சரும், அதிமுக அமைப்பு செயலாளருமான செல்லூர் ராஜூ கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த செல்லூர் ராஜூ கூறியதாவது: தமிழக மக்கள் பாஜகவை விட, திமுக மீது கடும் வெறுப்பில் உள்ளனர். அதிமுகவிற்கு வாக்களிக்க எப்பொழுது தேர்தல் வரும் என மக்கள் எதிர்நோக்கி காத்துக் கொண்டுள்ளனர். நாடாளுமன்ற தேர்தலில் நாங்கள் வாக்கு கேட்டு போகப்போவதில்லை. திமுக மீதுள்ள வெறுப்பில் மக்களே எங்களுக்கு வாக்குகளை செலுத்தி விடுவார்கள். 

sellur raju

ஜி.எஸ்.டி வேண்டாம் என சொல்லிவிட்டு பால், தயிர், வெண்ணெய் உள்ளிட்ட பொருட்களுக்கு வரி கேட்டு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். கூட்டணி என்பது நிரந்தரமானது அல்ல. அந்த வகையில் பாஜக-வோடு கூட்டணியை தொடர்வது குறித்து தேர்தல் நேரத்தில் அதிமுக தலைமை முடிவெடுக்கும்.தொடர்ந்து பேசிய அவர், இரட்டை குதிரையில் சவாரி செய்வது முடியாத ஒன்று. ஒற்றை மனிதரின் அதிகாரத்தில் கட்சியை கொண்டு வந்துள்ளோம். ஒரு தொண்டன் கூட கட்சியில் இருந்து செல்லக் கூடாது என்பதே எங்கள் விருப்பம். காளிமுத்து, ஆர்.எம்.வீரப்பன், பண்ருட்டி ராமச்சந்திரன் எல்லோரும் தவறு செய்து விட்டு மன்னிப்பு கேட்டு திரும்பியவர்கள் தான். அந்தவகையில், எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் பிரிவும் அண்ணன் தம்பி போராட்டம் தான். ஆகவே ஓ.பன்னீர்செல்வம் மனம் திருந்தி வந்தால் நிச்சயம் ஏற்போம். பொதுச்செயலாளர் தலைமையை ஏற்று யார் வந்தாலும் ஏற்றுக் கொள்வோம். இவ்வாறு தெரிவித்தார்.