மக்கள் விரோத ஆட்சியை தி.மு.க. நடத்துகிறது - எஸ்.பி.வேலுமணி குற்றச்சாட்டு

 
velumani

மற்றவர்கள் மீது பழியை போட்டு தப்பிப்பதே தி.மு.க.வின் வாடிக்கையாகி விட்டது எனவும், மக்கள் விரோத ஆட்சியை தி.மு.க. நடத்திக் கொண்டிருப்பதாகவும், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குற்றம்சாட்டியுள்ளார். 

சொத்து வரி, மின் கட்டண உயர்வை கண்டித்து, தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த அக்கட்சியின் தலைமை முடிவு செய்துள்ளது. இந்நிலையில், கோவை மாவட்டத்தில் நடத்தப்படும் ஆர்ப்பாட்டம் தொடர்பான ஆயத்த கூட்டம் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் கோவையில் நடைபெற்றது. அப்போது எஸ்.பி.வேலுமணி கூறியதாவது: சொத்து வரி, மின் கட்டண உயர்வு செய்து, மக்கள் விரோத ஆட்சியை தி.மு.க., நடத்துகிறது. உயர்த்தப்பட்ட சொத்து வரியை, இப்போது தான் மக்கள் செலுத்தப் போகின்றனர். அதன் வலி, மக்களுக்கு தெரிய ஆரம்பிக்கும். இனி, வரி சீராய்வு செய்யப் போகின்றனர். அவ்வாறு செய்தால், ஆயிரம் ரூபாய் வரி செலுத்துவோருக்கு, 15 ஆயிரம் அல்லது, 20 ஆயிரம் செலுத்த வேண்டி வரும்.

sp velumani

மத்திய அரசு சொல்வதை எல்லாம் மாநில அரசு கேட்கிறதா? மின் கட்டண உயர்வுக்கு மத்திய அரசு மீது பழி போடுகிறது. ஒரு வீட்டில் கீழ் தளத்துக்கு தனி இணைப்பு, மாடி வீட்டுக்கு தனி இணைப்பு பெற்றிருப்பார்கள். இப்போது, ஒரு வீட்டுக்கு ஒரு இணைப்பு என்கிறார்கள். அப்போது, 100 யூனிட் இலவசம் இருக்காது. டெக்னிக்கலாக செய்து, மக்களுக்கு சுமையை தருகிறார்கள். ஒரு பிரச்னையை மறைக்க இன்னொரு பிரச்னையை கிளப்பி விடுகின்றனர். மற்றவர்கள் மீது பழியை போட்டு தப்பிப்பதே தி.மு.க., வேலை. கோவையில், 500 இடங்களில் ரோடு போடுவதை ரத்து செய்து விட்டார்கள். ரோடெல்லாம் குண்டும் குழியுமாக உள்ளது. லஞ்சம் இல்லாமல் எந்த வேலையும் நடப்பதில்லை.  இவ்வாறு கூறினார்.