ஓபிஎஸ் நிறுத்தும் வேட்பாளர் நோட்டாவை விட குறைவான வாக்குகளை தான் பெறுவார் - ஜெயக்குமார்

 
jayakumar

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் நிறுத்தும் வேட்பாளர் நோட்டாவை விட குறைவான வாக்குகளை தான் பெறுவார் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். 

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த  திருமகன் ஈவேரா மாரடைப்பால் கடந்த 04ம் தேதி காலமானார்.  இதனையடுத்து ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கு வருகிற பிப்ரவரி 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. வாக்கு எண்ணிக்கை வருகிற மார்ச் 02ம் தேதி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  வேட்புமனு தாக்கல் ஜனவரி 31ஆம் தேதி தொடங்குகிறது.  இதையொட்டி அனைத்து கட்சிகளும் தேர்தலை சந்திக்க சுறுசுறுப்பாகி வருகிறது. தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியே இந்த தேர்தலில் போட்டியிடும் என திமுக அறிவித்துள்ளது. அதிமுகவை பொறுத்தவரையில், எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இரு தரப்பும் தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறது.  

இந்நிலையில், ஓபிஎஸ் நிறுத்தும் வேட்பாளர் நோட்டாவை விட குறைவான வாக்குகளை தான் பெறுவார் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: திமுகவின் பீ டீமாக ஓபிஎஸ் செயல்பட்டு வருகிறார். ஓபிஎஸ், பீகார், ஒடிசா என்று எங்கு போனாலும் அதை பற்றி கவலையில்லை. ஓபிஎஸ் வேட்பாளரை நிறுத்தினால் சுயேட்சை வேட்பாளராக தான் கருத முடியும். ஓபிஎஸ் நிறுத்தும் வேட்பாளர் நோட்டாவை விட குறைவான வாக்குகளை தான் பெறுவார். இவ்வாறு கூறினார்.