ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பூக்கள் விலை அதிரடி உயர்வு

 
Flower

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சென்னை கோயம்பேடு பூ மார்க்கெட்டில் மல்லிகைப் பூ கிலோவுக்கு 100 ரூபாய்க்கு மேல் அதிகரித்துள்ளது.

சென்னை கோயம்பேடு பூ மார்க்கெட்டுக்கு தமிழகத்தில் உள்ள திண்டுக்கல், மதுரை, வேலூர், நிலக்கோட்டை, திருச்சி, ஓசூர், சேலம் மற்றும் கர்நாடகா, ஆந்திராவில் இருந்து தினமும் 12 முதல் 15 லாரிகளில் இருந்து பூக்கள் வருகிறது. நாளை ரம்ஜான் பண்டிகை என்பதால் வழக்கத்தை விட பூக்கள் வரத்து அதிகரித்துள்ளது. இருப்பினும் தேவை அதிகரித்துள்ளதால் பூக்கள் விலை  பல மடங்கு உயர்ந்துள்ளது. ரமலான் நாளன்று தர்காக்களில் அலங்காரத்திற்கு மல்லிகைப் பூக்கள் அதிகளவில் பயன்படுத்தப்படும் என்பதால் மல்லிகைப் பூ விலை அதிகளவில் உயர்ந்துள்ளது.

Malligai

 

நேற்றைய தினம் கிலோ 180 ரூபாய்க்கு விற்பனையான மல்லிகைப்பூ இன்று 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் ரமலான் பண்டிகையை முன்னிட்டு கனகாம்பரம், சம்மங்கி பூக்களின் விலையும் உயர்ந்துள்ளன. நேற்று 400 ரூபாய்க்கு விற்பனையான கனகாம்பரம் இன்று கிலோவுக்கு  100 ரூபாய் வரை உயர்ந்து 500 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் நேற்று 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட சம்மங்கி பூ இன்று 90 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் முல்லை ஒரு கிலோ 250 ரூபாய்க்கும், சாமந்தி ஒரு கிலோ 250 ரூபாய்க்கும், ரோஜா 60 ரூபாய் முதல் 80 ரூபாய் வரையும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.