2வது திருமணம் செய்துகொண்டு ரகசியமாக குடும்பம் நடத்திய மகளை வெட்டிக்கொன்ற தந்தை!

 
murder

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள தாதன்குளத்தில் இளம்பெணை வெட்டிக் கொன்ற தந்தை, தாய் உள்பட 5 பேரை செய்துங்கநல்லூர் போலீசார் தேடிவருகின்றனர். 

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள தாதன்குளத்தைச் சேர்ந்தவர் சுடலைமுத்து. இவரது மகள் மீனா(21). மீனாவுக்கு கடந்த 4 வருடங்களுக்கு முன்னர் தாதன்குளம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தை சேர்ந்த இசக்கிப்பாண்டியன் என்பவருக்கு திருமணம் முடித்து கொடுத்தனர். அவர்களுக்கு நிஷாந்த் என்ற 4 வயதில் மகன் உள்ளார். 

இந்த நிலையில் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். மேலும் மகன் இசக்கிப்பாண்டியனிடம் இருந்து வருகிறார்.  இதற்கிடையில் திருநெல்வேலி மாவட்டம் பட்டப்பிள்ளை புதூரைச் சேர்ந்த மற்றொருவரை மீனா திருமணம் செய்துள்ளார்.  கடந்த 10 மாத காலமாக அவருடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார். மீனா இரண்டாவதாக திருமணம் செய்ததை உறவினர்கள் சுடலைமுத்துவிடம் கூறியுள்ளார். இதனால் சுடலைமுத்துவிற்கு அவமானம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று தாதன்குளத்தில் கோவில் திருவிழாவிற்காக மீனா தனது சித்தி பார்வதி வீட்டிற்கு வந்துள்ளார். இந்த தகவல் சுடலைமுத்துவிற்கு தெரிந்துள்ளது. எனவே அவரை நேரில் தேடிச் சென்று தகராறில் ஈடுபட்டுள்ளார். சுடலைமுத்துவின் மனைவி முப்பிடாதி, மகன் மாயாண்டி, சுடலைமுத்துவின் அண்ணன் தளவாய் மனைவி வீரம்மாள், அவரது மகன் முருகன் ஆகியோர் அவருடன் சென்றனர். அப்போது பேச்சுவார்த்தை முற்றவே சுடலைமுத்து கையில் மறைத்து வைத்திருந்த அரிவாளை கொண்டு மீனாவின் கழுத்து மற்றும் தலையில் வெட்டினார்.  இதில் ரத்த வெள்ளத்தில் மீனா அங்கே சரிந்து விழுந்து உயிரிழந்தார். உடனே அவர்கள் அனைவரும் அங்கிருந்து தப்பி ஓடினர்.