மனைவியின் நினைவு நாளில் பிரபல ரவுடி தீக்குளித்து தற்கொலை

மனைவியின் நினைவு நாளில் அவரின் பிரிவு துயர் தாங்காமல் அவரை மாதிரியே பிரபல ரவுடி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.
சென்னை சூளைமேட்டில் பிரபல ரவுடி பிரசாந்த். கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இவர் மீது உள்ளன. இவர் குளோரியா என்கிற பெண்ணை காதலித்து திருமணம் செய்திருந்தார். பிரசாந்தின் ரவுடிசத்தால் மனம் உடைந்த குளோரியா கடந்த ஆண்டு தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இதனால் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார் பிரசாந்த்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் குளோரியாவின் முதலாம் ஆண்டு நினைவு தினம் வந்திருக்கிறது. இதை முன்னிட்டு பிரசாந்தின் வீட்டிற்கு உறவினர்களும் நண்பர்களும் வந்திருந்துள்ளார்கள். அப்போது பிரசாந்த் அவர்களிடம் குளோரியாவை பற்றி சொல்லி மன வருத்தத்தில் இருந்திருக்கிறார்.
திடீரென்று வீட்டின் அறைக்குள் சென்று உள் பக்கமாக கதவை பூட்டிக் கொண்டிருக்கிறார். உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டிருக்கிறார் பிரசாந்த். உடலில் தீப்பற்றி எரிந்ததும் கதறியிருக்கிறார்.
பிரசாந்தின் அலறல் சத்தத்தை கேட்ட உறவினர்கள் வீட்டின் கதவை உடைத்துக் கொண்டு சென்று தீயை அணைத்துள்ளனர். பின்னர் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 90 சதவிகிதம் தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த ரவுடி பிரசாந்த் நேற்று உயிரிழந்தார். சம்பவம் குறித்து அறிந்த கோடம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.