முன்னாள் மருத்துவ மாணவர் தற்கொலை - ஸ்டான்லி மருத்துவமனையில் பரபரப்பு..

 
தற்கொலை

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக்கல்லூரி விடுதியில் முன்னாள் மாணவர்  தற்கொலைச் செய்துகொண்ட சம்பவம்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தை அடுத்த மேற்கு காட்டுகொட்டாய் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயசங்கர் என்பவருடைய மகன் குமரவேல்.  இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு  சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனை  மருத்துவ கல்லூரியில்  மருத்துவம் படிப்பதற்காக சேந்துள்ளார்.  தற்போது மருத்துவ படிப்பை  முழுவதுமாக  நிறைவு செய்துவிட்ட நிலையில் 2 பாடங்களில் குமரவேல் தேர்ச்சி பெறாமல் இருந்துள்ளார்.  இதனால் டாக்டராக முடியவில்லையே என்ற  மன உளைச்சலில் குமரவேல் இருந்து வந்துள்ளார்.  பின்னர் படிப்பு முடிந்து சொந்த ஊருக்குச் சென்ற அவர்,  மன உளைச்சல் காரணமாக சேலம் அரசு மருத்துவமனையில்  மனநல சிகிச்சை பெற்று வந்ததாகவும் தெரிகிறது.

முன்னாள் மருத்துவ மாணவர் தற்கொலை - ஸ்டான்லி மருத்துவமனையில் பரபரப்பு..

இந்தநிலையில் அவர் 2 நாட்களுக்கு முன்பு , மருத்துவ கல்லூரியில் சேரும்போது கொடுத்த பள்ளி சான்றிதழ்கள் திரும்ப பெறுவதற்காக தனது தந்தை ஜெய்சங்கருடன் சென்னை வந்துள்ளார். பின்னர் நேற்று முன்தினம் தனது நண்பர்களை சந்திப்பதற்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனை  வளாகத்தில் உள்ள மருத்துவ கல்லூரி மாணவர் விடுதிக்கு குமரவேல் சென்றிருக்கிறார். அங்கு நண்பர்களை பார்த்துவிட்டு கழிவறைக்கு சென்ற குமரவேல் ,  நீண்டநேரம் ஆகியும் வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது தந்தை அங்கு சென்று பார்த்தபோது,   அவர்  மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதனைப்பார்த்து  அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக  குமரவேலை  ஸ்டான்லி  மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தார்.  

மாத்திரை

 ஆனால்  சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு குமரவேல் பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி சென்னை ஏழுகிணறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில்,  மருத்துவர் ஆக முடியவில்லையே என்கிற வருத்தத்தில் இருந்த குமரவேல்,  மீண்டும் விடுதியில் உள்ள தனது நண்பர்களை பார்த்தவுடன் மேலும் விரக்தி அடைந்ததும், அதவால்   அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.   இந்த சம்பவம் குறித்து  காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.