ராமஜெயம் கொலை வழக்கில் 2வது நாளாக 5 பேருக்கு பரிசோதனை

ராமஜெயம் கொலை வழக்கில் உண்மை கண்டறியும் சோதனைக்காக இரண்டாவது நாளாக ஐந்து பேருக்கும் இன்று திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பரிசோதனை நடந்தது .
திமுக அமைச்சர் கே என். நேருவின் சகோதரர் ராமஜெயம், நடை பயிற்சியின் போது கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த படுகொலை வழக்கில் சிறப்பு புலனாய்வு குழுவினர் கடந்த ஆறு மாதமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த வழக்கில் சந்தேகப்படும் நபர்களாக 13 பேரிடம் உண்மை கண்டறியும் பரிசோதனை நடத்த சிறப்பு புலனாய்வு குழு முடிவு செய்தது. இதை அடுத்து சாமி ரவி, திலீப், சிவா, ராஜ்குமார், சுரேந்தர், சத்யராஜ் , நரைமுடி கணேசன், தினேஷ், மோகன் ராவ் , கலைவாணன் , செந்தில், மாரிமுத்து ஆகிய 12 பேரும் உண்மை கண்டறியும் சோதனைக்கு சம்மதம் தெரிவித்தனர்.
இதை அடுத்து இவர்களின் முழு உடல் தகுதி மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு அந்த அறிக்கையை வரும் 21ஆம் தேதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உத்தரவிட்டிருந்தார் நீதிபதி . இதை அடுத்து நேற்றைய தினம் ஆறு பேருக்கு இதய நோய் நிபுணர், அறுவை சிகிச்சை நிபுணர், பொது மருத்துவர், மனநல மருத்துவர் உட்பட ஐந்து மருத்துவர்கள் பரிசோதனை மேற்கொண்டுள்ளனர்.
கடலூர் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் செந்தில் என்பவருக்கு கடலூர் அரசு மருத்துவமனையில் பரிசோதனை நடந்தது. நரைமுடி கணேசன், கலைவாணன், மாரிமுத்து, தினேஷ், மோகன் ராம் ஆகிய ஐந்து பேருக்கும் திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பரிசோதனை நடந்தது. இன்று இரண்டாவது நாளாக இந்த பரிசோதனை நடந்தது. இந்த பரிசோதனை அறிக்கை அடிப்படையில்தான் வரும் 21ஆம் தேதி நீதிபதி உண்மை கண்டறியும் சோதனை தொடர்பான முடிவுக்கு உத்தரவிட உள்ளார்.