தமிழ்நாட்டை கருணாநிதி நாடு என மாற்றிவிடுவார்கள் - ஜெயக்குமார் விமர்சனம்

 
jayakumar

எத்தனையோ திட்டங்கள் இருக்கும்போது, பழமையான கிழக்கு கடற்கரை சாலைக்கு ஏன் கருணாநிதி பெயரை வைக்க வேண்டும்? என கேள்வி எழுப்பியுள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூடிய விரைவில் தமிழ்நாட்டை கருணாநிதி நாடு என மாற்றிவிடுவார்கள் என விமர்சித்துள்ளார். 

 நில அபகரிப்பு வழக்கு தொடர்பாக நிபந்தனை ஜாமீன் பெற்றுள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மத்திய குற்றப் பிரிவு அலுவலகத்தில் கையெழுத்திட்டார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார் பேசியதாவது: மறைந்த தலைவர்கள் பெயரை நான் கொச்சைப்படுத்த விரும்பவில்லை. தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதுக்கும் பெயர் பெற்ற சாலை கிழக்கு கடற்கரை சாலை. தொடர்ந்து காலம் காலமாக ECR என்று படித்து வந்த நிலையில் தற்போது புதிதாக ஒரு பெயர் எதற்கு ?  எத்தனையோ திட்டங்கள் இருக்கின்றன அதற்கு அந்த பெயரை வைத்து கொள்ளலாம். தமிழ்நாடே கருணாநிதி நாடு என்று மாற்றி விடுவார்கள் என்று தோன்றுகிறது.

jayakumar

அதிமுகவில் கொடி கட்டிய நபர் கூட பதவியில் அமர முடியும். ஆனால் திமுகவில் நேரு, பொன்முடி போன்றவர் ஸ்டாலினுக்கு அடுத்து வர முடியுமா ? மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசன், உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் தான் நிழல் முதலமைச்சராக செயல்பட்டு வருகிறார்கள்.  ஸ்டாலினுக்கு பின், அரசியல் அனுபவம் வாய்ந்த துரைமுருகன், கே.என்.நேரு ஆகியோருக்கு முதலமைச்சர் பதவி வழங்க முடியாது. ஏனென்றால் திமுக வாரிசு அரசியல். உதயநிதிக்கு ஒரு பெரிய பதவியை வழங்கவே தற்போது அவர் முன்னிலை படுத்தப்பட்டு வருகிறார்.

திமுக அமைச்சர்களிடம் நிர்வாகிகளிடமும் மரியாதையை எதிர்பார்க்க முடியாது. துணை ஆணையர்கள் செயலாளர்களை திமுகவின் அமைச்சர்கள் ஒருமையில் பேசுகிறார்கள் என்றும், அவர்கள் ஜனநாயகவாதிகள் அல்ல, ஜமீன்தார்கள். அவர்களின் அரசியல் ஜமீன்தார் அரசியல். திமுக ஆட்சிக்காலத்தில் சட்டக்கல்லூரி மாணவர்கள் மோதியதை யாராலும் மறக்க முடியாது. அதேபோன்று தொடர்ந்து தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் மாணவ மாணவியர் மோதிக் கொள்வது வேதனை அளிக்கிறது. ஒன்றரை லட்சம் பேரை கொன்று குவித்துவிட்டு, காயத்திற்கு மருந்து போடுவது போன்று உள்ளது திமுகவின் இலங்கைக்கு நிவாரண பொருட்கள் அறிவிப்பு உள்ளது. இன்று நிவாரணம் பொருள்கள் அனுப்புவேன் என்று சொல்வதை மக்கள் நம்ப மாட்டார்கள் என்றார். இவ்வாறு தெரிவித்தார்