எல்லாம் வெறும் வேஷம்.. அண்ணாமலையும், ஆளுநர் ரவியும் இரட்டை குழல் துப்பாக்கி..- கே.எஸ்.அழகிரி..

 
கே எஸ் அழகிரி

ஆளுநர் ஆர்.என்.ரவி, அண்ணாம்லை போன்ற பாஜக சக்திகளிடமிருந்து தமிழகத்தையும் தமிழக மக்களையும் காப்பாற்ற  வகுப்புவாத  எதிர்ப்பு சக்திகள் ஒன்றிணைந்து போராட வேண்டிய அவசர  சூழல் உருவாகியிருக்கிறது என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.  

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்;  “தமிழக ஆளுநராக ஆர்.என். ரவியை நியமித்த போது, பலரும் வாழ்த்து தெரிவிக்க நான் மட்டுமே கடுமையாக எதிர்த்தேன். எதிர்க்கட்சிக் கட்சிகள் ஆளும் மாநிலங்களில் இடையூறு செய்வதற்காகவே இதுபோன்ற நியமனங்களை ஒன்றிய அரசு செய்திருப்பதையும் சுட்டிக்காட்டியிருந்தேன்.  நேர்மையான ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இடையூறு செய்யும் வகையில், ஆர்.என்.ரவியை ஆளுநராக நியமித்திருக்கிறார்களோ? என்ற சந்தேகத்தையும் அப்போது எழுப்பியிருந்தேன். ஆர்.என்.ரவியை ஆளுநராக நியமித்த உடனே எதிர்ப்பு தெரிவிப்பதா? என்று பலரும் கேள்வி எழுப்பினார்கள். ஆனால், நான் எழுப்பிய சந்தேகங்களை எல்லாம் இன்றைக்கு ஆளுநர் ரவி உண்மையாக்கிக் கொண்டிருக்கிறார்.

முதன்முறையாக ஆளுநர் ஆர்.என் ரவி

 தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் தேர்வு விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பி தமிழக மக்களுக்கு ஆளுநர் ரவி துரோகம் செய்தார். நீட் மசோதா மட்டுமின்றி தமிழக அரசின் 18 க்கும் மேற்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டு தமிழகத்துக்கும் தமிழக மக்களுக்கும் எதிராக செயல்பட்டார். அனைவருக்கும் பொதுவானவராக இருக்க வேண்டிய ஆளுநர் ரவி, 'சனாதன தர்மத்தில் ஓளியால் உருவாக்கப்பட்டதே இந்தியா' என்று பேசி, ஆர்.எஸ்.எஸ் முகத்தைக் காட்டினார். மதவாத, வருணாசிரம, வன்முறை கருத்துகளை ஆளுநர் பதவியிலிருந்து கொண்டு கூறுவது  அழகல்ல. இதைவிட ஜனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைக்கும் செயல் வேறேதும் இருக்க முடியாது.

கோவை பந்த் - அண்ணாமலை

சமீபத்தில் கோவை கார் வெடிப்புச் சம்பவத்தில், தேசிய புலனாய்வு முகமையின் விசாரணைக்கு பரிந்துரைத்ததில் தாமதம் ஏன்? என்று, தமிழக பா.ஜ.க. தலைவர் தலைவர் அண்ணாமலையை போல் கேள்வி எழுப்பியிருக்கிறார் ஆளுநர் ரவி. அண்ணாமலை தான் சிறுபிள்ளைத்தனமாக அரசியல் செய்கிறார் என்றால், முக்கிய பொறுப்பில் இருக்கும் ஆளுநரும் அதையே செய்யலாமா? அது ஆளுநர் பதவிக்கு அழகா?. பொய்யைத் திரும்பத் திரும்பச் சொல்லி உண்மையாக்க முயல்வது தான் பா.ஜ.கவின் நரித்தனம்.  வரலாறுகளைத் திரிக்கும் வேலையை அமித்ஷா மட்டுமல்ல, அவரது இரட்டைக் குழல் துப்பாக்கியாகச் செயல்பட்டு வரும் ஆளுநர் ரவியும், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையும் செய்து வருகின்றனர்.

கே.எஸ்.அழகிரி - அண்ணாமலை

ஆளுநர் ரவிக்கும் அண்ணாமலைக்கும் தமிழ் மொழி மீது ஏற்பட்டிருக்கும் பாசம் வெறும் வேஷம் என்பதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள்.  அரசிலும் அரசியலிலும் செய்யும் ஜனநாயக படுகொலையையும், கோமாளித் தனத்தையும் இனியும் கைக்கட்டி, வாய்மூடி மவுனமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. தமிழகத்தில் ஜனநாயகப் படுகொலையை நடத்துவதற்கு இருவரையும் ஆயுதமாகப் பயன்படுத்த பா.ஜ.க. முயல்கிறது.  பூனைகள் வெளியே வந்து விட்டன. இவற்றுக்கு மணி கட்டுவதற்கு நேரம் வந்துவிட்டது. இத்தகைய சக்திகளிடமிருந்து தமிழகத்தையும் தமிழக மக்களையும் காப்பாற்ற  வகுப்புவாத  எதிர்ப்பு சக்திகள் ஒன்றிணைந்து போராட வேண்டிய அவசர  சூழல் உருவாகியிருக்கிறது” என்று தெரிவித்தார்..