இடைத்தேர்தலுக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்குமா? பழனிசாமியின் மாஸ்டர் பிளான்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, 2021 சட்டமன்றத் தேர்தல் போல அதிமுக கூட்டணி சார்பில் தமிழ் மாநில காங்கிரஸ் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகின. ஆனால் அதிமுக தமாகா-வுக்கு இடத்தை விட்டுவிட்டுக்கொடுக்க மறுத்துவிட்டது. மாறாக பாஜக தனித்து போட்டியிட திட்டமிட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக போட்டியிட்டால் இரட்டை இலை சின்னம் பெற ஓ.பன்னீர்செல்வத்தின் கையெழுத்து தேவை. பன்னீர்செல்வம்- பழனிசாமி இணைந்து கையெழுத்திட்டால் மட்டுமே அதிமுகவில் மீண்டும் இரட்டைத் தலைமை என்பது உறுதியாகிவிடும். ஓ.பி.எஸ். கையெழுத்திட்டால் மட்டுமே சின்னம் கிடைக்கும் என்பதால், மீண்டும் இரட்டைத் தலைமை சர்ச்சையை தவிர்க்க, தேர்தல் ஆணையம் மூலம் இரட்டை இலை சின்னத்தை பெற எடப்பாடி தரப்பு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கட்சியின் வரவு, செலவு கணக்கை எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்ததை தேர்தல் ஆணையம் ஏற்றதை சுட்டிக்காட்டி சின்னத்தை பெற முயற்சி என தகவல் வெளியாகியுள்ளது. எடப்பாடி தரப்பு ஆணையத்தில் முறையிட்டாலும் அவர்களுக்கு இரட்டை இலை வழங்க பன்னீர்செல்வம் எதிர்ப்பு தெரிவிப்பார் எனக் கூறப்படுகிறது. தேர்தல் ஆணையத்தின் முடிவை பொறுத்தே ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் இடம்பெறுமா? என்பது தெரியவரும்.