கருமுட்டை விவகாரம்- சுதா மருத்துவமனை ஸ்கேன் மையம் மீண்டும் மூடல்

 
சுதா மருத்துவமனை ஸ்கேன் மையம்

சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, சுதா மருத்துவமனையின் 10 ஸ்கேன் இயந்திரங்களுக்கும் அது வைக்கப்பட்டுள்ள 4 அறைகளுக்கும் அதிகாரிகள் இரண்டாவது முறையாக சீல் வைத்தனர்.

Salem Sudha Hospital Scan Center 'Seal' | சிறுமியிடம் கருமுட்டை எடுத்த  விவகாரம்: சேலம் சுதா மருத்துவமனை ஸ்கேன் மையத்துக்கு 'சீல்'


தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஈரோடு 16 வயது சிறுமியின் கரு முட்டை விற்பனை வழக்கில் ஈரோடு, சேலம், ஓசூர் பெருந்துறை ஆகிய இடங்களில் உள்ள 4 தனியார் மருத்துவமனைகள் மீது தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டது.  மருத்துவ உயர்மட்ட குழுவினர் அளித்த அறிக்கையின் அடிப்படையில் நான்கு மருத்துவமனைகளின் ஸ்கேன் மையங்கள் சீல் வைக்கப்பட்டதுடன்,  நிரந்தரமாக மருத்துவமனைகளை மூடுவதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.  இதனை எதிர்த்து ஈரோடு சுதா மருத்துவமனை சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதனை விசாரித்த தனி நீதிபதி அரசின் நடவடிக்கையை ரத்து செய்திருந்தார். இதனையடுத்து ஸ்கேன் மைய சீல் அகற்றப்பட்டது.  , தொடர்ந்து அரசு செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்தது. 

இதனையடுத்து, ஈரோடு மாவட்ட மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர் பிரேமகுமாரி,குடும்ப நலப்பணிகள் துணை இயக்குனர் ராஜசேகர் மற்றும் வட்டாச்சியர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் சுதா மருத்துவமனையில் ஸ்கேன் மையங்களுக்கு இரண்டாவது முறையாக சீல் வைத்தனர். சுதா கருத்தரித்தல் மையம், சுதா பல்துறை மருத்துவமனை, சுதா குழந்தைகள் மருத்துவமனை ஆகிய 3 மருத்துவமனைகளிலும் இருந்த 10 ஸ்கேன் இயந்திரங்களும், அதன் 4 அறைகளும் சீலிடப்பட்டன. சீல் வைத்த பின் பேட்டியளித்த மருத்துவ நல பணிகள் இணை  இயக்குனர் பிரேமகுமாரி, இந்த மருத்துவமனையில் உள்ள  நோயாளிகளை வெளியேற்றுவதற்கு நேற்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும், இதில் 46 நோயாளிகள் இதுவரை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர் என்றும் மீதமுள்ள 48 நோயாளிகள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதும் நாளை மருத்துவமனைக்கு சீல் வைக்கும் பணி நடைபெறும் என்றும் தெரிவித்தார். மேலும்  ஸ்கேன் மையங்களுக்கான அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டதற்கான உத்தரவு நகல் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். இதனிடையே, சுதா மருத்துவமனை மீதான நடவடிக்கையை கைவிட கோரி இந்திய மருத்துவர் சங்கம், தொழில் வணிகர் கூட்டமைப்பு, BNI, தன்னார்வ அமைப்பினர் என 300 க்கும் மேற்பட்டோர் அமைச்சர் சு.முத்துசாமியை சந்தித்து பேசினர். அப்போது அவர்களிடம் பேசிய அமைச்சர், எவ்வித விருப்பு வெறுப்பும் இல்லாமலும் உள்நோக்கம் ஏதுமின்றி யும் சட்டத்தின் அடிப்படையில் மட்டுமே சுதா மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.