ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் : தேமுதிக மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை..

 
தேமுதிக

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னையில் நடைபெற்று வருகிறது.

 ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவெரா மறைவையடுத்து, அந்தத் தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  இதற்கான வேட்பு மனுத்தாக்கல் வரும் 31-ம் தேதி தொடங்குகிறது. இதில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிருவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் என இரு அணிகளுமே தனித்தனியாக போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளன.  தமிழ் மாநில காங்கிரஸ் அதிமுகவுக்கு வழிவிட்டு ஒதுங்கிய நிலையில், பாமக போட்டியும் இல்லை, ஆதரவும் இல்லை என விலகிக்கொண்டது.  பாஜக தனது நிலைப்பாட்டை தெரிவிக்காமல் மௌனம் சாதித்து வருகிறது.   

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் : தேமுதிக மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை..

ஒரு பக்கம் தேர்தல் களம் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்க அதிமுக கூட்டணி சார்பில் வேட்பாளர் யார் என்பது முடிவாகவில்லை.  தொடர்ந்து  கூட்டணி கட்சிகளிடம்  பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.  இந்நிலையில், சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில்,  ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்த தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்  நடைபெற்று வருகிறது. இதில், தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், துணைச் செயலாளர் சுதீஸ் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.  மாவட்ட செயலாளர்களிடம் கருத்துகள்  கேட்கப்பட்டு வருகின்றன.  இந்தக் கூட்டத்தில்  ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுக்கப்பட  வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.