ஓபிஎஸ் மரியாதை செலுத்தகூடாது என பெரியார் படத்தை தூக்கி சென்ற ஈபிஎஸ் ஆதரவாளர்கள்

 
Ops

தந்தை பெரியாரின் 144வது பிறந்தநாளையொட்டி 
அண்ணா சாலை ஜெமினி மேம்பாலம் அருகே உள்ள பெரியார் சிலைக்கு அதிமுகவின்
இடைக்கால  பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார்.

முன்னதாக எடப்பாடி பழனிசாமி பெரியாருக்கு மரியாதை செலுத்துவதற்கு ஏதுவாக அவரது ஆதரவாளர்கள் பெரியார் படத்தை சிலைக்கு கீழ் அலங்கரித்து வைத்திருந்தனர். இபிஎஸ் மரியாதை செலுத்திச் சென்ற உடனே அவரது ஆதரவாளர்கள் பெரியார் படத்தை கையோடு தூக்கிச் சென்று விட்டனர். அடுத்ததாக ஓபிஎஸ் மரியாதை செலுத்த பெரியார் படம் இல்லாத ஒரு நிலை ஏற்பட்டதால், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே சலசலப்பு ஏற்பட்டது. 

இதன் தொடர்ச்சியாக, டிடிவி தினகரனின் அமமுக சார்பில் முன்னாள் அமைச்சர் செந்தமிழன் பெரியார் படத்திற்கு மரியாதை செலுத்த வந்திருந்தார். அவரது தரப்பில் புதிய பெரியார் படம் கொண்டு வந்து வைக்கப்பட்டு, பின்னர் அதற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். இதனிடையே, ஓபிஎஸ் தரப்பில் பெரியார் படம் கொண்டு வராததால்,  அமமுகவினர் கொண்டு வந்த பெரியார் படத்திற்கே  அவரும் மரியாதை செலுத்திவிட்டுச் சென்றார். ஏற்கனவே, அதிமுக நிர்வாகிகள் மூன்று அணிகளாக பிரிந்து செயல்பட்டு வரும் நிலையில், பெரியாருக்கு மரியாதை செலுத்துவதிலும் பிரிந்தே செயல்பட்டது அங்கிருந்தவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.